சாராயக்கடையை அடித்து நொறுக்கிய விவகாரம்: 3 பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

p601புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும், அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை என்றும் இந்த கடையை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தி வந்தனர். முதல்–அமைச்சர் ரங்கசாமி மற்றும் கலால்துறை ஆணையாளரிடம் பல முறை மனுவும் அளித்தனர்.

இந்நிலையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு சார்பில் சாராயக்கடையை அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சாராயக்கடை முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர்  ஒன்று கூடினர்.

கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர். இதையடுத்து அங்கு சாராயம் குடித்துக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடினர். கடையில் வைக்கப்பட்டிருந்த சாராய பாட்டில்களை தூக்கிப்போட்டு பெண்கள் அடித்து நொறுக்கினர். கேனில் இருந்த சாராயத்தை தூக்கி வந்து நடுரோட்டில் கொட்டினர். ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான சாராயத்தை அவர்கள் ரோட்டில் கொட்டி கடையை சூறையாடினர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாராயக்கடையை அடித்து நொறுக்கிய புகாரில், 3 பெண்கள் உள்பட 4 பேர் மீது புதுச்சேரி கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-http://www.nakkheeran.in

TAGS: