முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை.. கைவிரித்தது மத்திய அரசு…

mullaiperiyarடெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்துவது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் எனக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துமாறு உத்தரவிட்டது.

அணையின் பாதுகாப்பு கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்பு பொறுப்பு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அணையைப் பராமரிக்க செல்லும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள அதிகாரிகளும், கேரள வனத்துறையினரும் அனுமதிக்கவில்லை. இதனால், அணையைப் பார்வையிடவும், பராமரிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது..

உள்நாட்டு சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரச்னை விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்க முடியும். அந்த அதிகாரம் சம்மந்தப்பட்ட மாநில அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க முடியும். அதில் மத்திய அரசு தலையிட முடியாது.

எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்குவது குறித்து மத்திய அரசால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.

அணை பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது என்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உதவி வேண்டும் என்று கேரள அரசு கேட்டால் மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு தருவது குறித்து பரிசீலனை செய்ய முடியும்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் கோரிக்கை வைக்க முடியாது. இந்த விஷயத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு தேவையில்லை.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று கேரள அரசு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த பதில் மனு தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: