சமூக – பொருளாதார கணக்கெடுப்பு:ஏழைகளை அவமதிக்கிறது மோடி அரசு

modi_gandhi_001சமூக – பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பில் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளை அவமதித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத்தின் வளர்ச்சி மாதிரி, ஏழைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்பு (யுனிசெஃப்) கணித்த புள்ளிவிவரங்களை மோடி அரசு மூடி மறைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜீவ் கெளடா, தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

நீண்டநாள் காத்திருப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள சமூக – பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு (2011), கிராமப்புற மேம்பாட்டுக்காக ஏராளமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது.

கிராமப்புற வளர்ச்சிக்காக பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற திட்டங்களை கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது.

ஊரக வேலை உறுதித் திட்டத்தை காங்கிரஸ் அரசின் தோல்வி என்றும், அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான நினைவுச்சின்னம் என்றும் மக்களவையில் பிரதமர் மோடி அண்மையில் குறிப்பிட்டார். மிகவும் நலிவடைந்த ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வகை செய்த இந்தத் திட்டத்தை அவர் விமர்சனம் செய்தது ஏழைகளை அவமதிப்பதாகும்.

பின்னர் தொடர்ந்து ஏழைகளை அவமதிக்கும் வகையில், ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும், கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை அரசு குறைத்தது.

பகட்டாக ஆடை அணியும் மனிதர்களுக்கான இந்த அரசு, பணக்காரர்கள், செல்வந்தர்களின் நலன் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறது.

யுனிசெஃப் அமைப்பின் புள்ளிவிவரங்களை வெளியிடவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ மத்திய அரசு ஏன் தயங்குகிறது? என்பதை “தி எகானமிஸ்ட்’ பத்திரிகை வெளிக்கொணர்ந்துள்ளது.

அதாவது, குஜராத்தில் நரேந்திர மோடி நடத்திய 12 ஆண்டுகால ஆட்சி முறையானது ஏழைகள், மகளிர், குழந்தைகள், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோரின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என யுனிசெஃப் அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உண்மை நிலவரங்களை மறைக்கவோ அல்லது அதுபோன்ற விவரங்கள் வெளிவராமல் தடுக்கவோ மத்திய அரசு முயலக் கூடாது. ஏழைகளின் நலனுக்கான முடிவுகளை வெளிப்படையாக எடுக்க வேண்டும் என்றார் ராஜீவ் கெளடா.

“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும்’

சமூக – பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பில் எடுக்கப்பட்டுள்ள ஜாதிவாரி விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, ராஜீவ் கெளடா கூறியதாவது:

வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட அரசுத் திட்டங்களின் மூலம் யார் யார் பயனடைந்தார்கள், யார் பயனடையவில்லை என்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட்டால்தான் அறிய முடியும்.

அதை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும்.

அதே வேளையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடும்போது பின்விளைவுகள் எதுவும் ஏற்படாத வண்ணம், கவனமான நடைமுறைகளை மத்திய அரசு கையாள வேண்டும் என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: