இந்தியாவில் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்தும் 6.68 லட்சம் குடும்பத்தினர்: அதிர்ச்சி தகவல்

india_map_001இந்தியாவில் 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்துவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பு அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது.

1931ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011ம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களை தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பாக இது அமைந்தது.

அந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. ஆனால் சாதி சார்ந்த விவரங்களை வெளியிடுவதை அரசு தவிர்த்து விட்டது.

இதில் இந்தியா முழுவதும் உள்ள 640 மாவட்டங்களில் வசித்து வரும் குடும்பங்களில், எடுக்கப்பட்ட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று உள்ளன.

இந்த கணக்கெடுப்பு படி, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 24.39 கோடி குடும்பங்கள் வசிக்கின்றன.

இதில் 17.91 கோடி குடும்பத்தினர் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 44.84 லட்சம் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரர்களாகவும், 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாகவும் வாழ்க்கையை ஓட்டுவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த கிராமப்புற மக்கள் தொகையில் 56 சதவீத குடும்பத்தினர் நிலமற்ற ஏழைகளாக வசித்து வருகின்றனர்.

மேலும், தலித் இனத்தை பொறுத்தவரையில் 70 சதவீதம் பேரும், பழங்குடியினர் 50 சதவீதத்தினரும் நிலமற்றவர்களாக இருந்து வருகின்றனர்.

-http://www.newindianews.com

TAGS: