ஆமதாபாத்: இந்திய நகர்ப்புறங்களில், 2080ல், வெயிலின் வெப்பத்தால் உண்டாகும் உயிரிழப்பு, இரு மடங்காக உயரும் என, ஆமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இம்மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவின், 57 நகர்புறங்களில், அதிகரித்து வரும் வெப்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில், இந்த நகர்ப்புற மக்கள், 15.70 கோடி என்ற அளவில் உள்ளனர். இந்தாண்டு கோடை வெயிலுக்கு, 2,000 பேர் பலியாகியுள்ளனர். நகர்புறங்களில், இந்த வகையிலான இறப்பு விகிதம், இந்த நுாற்றாண்டின் இறுதியில், தற்போதைய, 71 சதவீதத்தில் இருந்து, 140 சதவீதமாக உயரும். குறிப்பாக, டில்லி, ஆமதாபாத், பெங்களுரு, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், இறப்பு அதிகரிக்கும்.
வெப்பம், 3.3 டிகிரி சென்டிகிரேட் முதல், 4.8 சென்டிகிரேட் வரை நிலையாக உயர்ந்திருக்கும். தற்போதைய சிறிய நகரங்கள், மக்கள் தொகை பெருக்கத்தால், பெரிய நகரங்களாக மாறும்போது, வெப்பத்தின் தாக்கமும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். வளரும் நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் இருக்கும். மாறி வரும் தட்ப வெப்ப நிலை, மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அரசு, இதை சமாளிக்கத் தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-http://www.dinamalar.com