இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி சந்தித்துப் பேசியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த ஓராண்டாக தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:
இரு நாட்டுத் தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பான்-கீ-மூன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு நடைபெற்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நல்லுறவு, அந்த இரு நாடுகளுக்கு மட்டுமின்றி இந்தியத் துணைக் கண்டத்துக்கே நன்மை பயக்கும் என்றார் அவர்.
-http://www.dinamani.com/