தமிழக அரசு உற்பத்தி செய்யும், ‘கிரீன் டீ’க்கு, நல்ல வரவேற்பு இருந்தாலும், லாபம் குறைவு என்பதால், அதை வாங்கி விற்க, வணிக நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. அதனால், குறைந்த விலை கிரீன் டீ, அதிகம் பேரை சென்றடையவில்லை.
உடலை சுத்திகரிக்கும், ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்’ அதிகம் இருப்பதாக, டாக்டர்கள் பரிந்துரைப்பதால், கிரீன் டீ எனப்படும், பச்சை தேயிலையை, வெந்நீரில் போட்டு பருகும் வழக்கம், மக்களிடம் அதிகரித்து உள்ளது. தமிழக அரசின், தேயிலை தோட்டக் கழகமான, ‘டேன்டீ’ தான், கிரீன் டீ தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆனால், அரசு தயாரிப்பை வணிக நிறுவனங்கள் வாங்க மறுப்பதாக, வனத் துறையினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து, டேன்டீ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் எங்களுக்கு, எட்டு தேயிலை தோட்டங்கள் உள்ளன. கோத்தகிரியில் உள்ள, ‘குயின் சோழா’ ஆலையில் மட்டும், மாதத்துக்கு, 4,000 கிலோ, கிரீன் டீ தயாரிக்கிறோம். இது, 50, 100, 250 கிராம் என, பல எடை அளவுகளில் விற்கப்படுகிறது.
இதில், 100 கிராம் பாக்கெட், 80; 250 கிராம் பாக்கெட், 150 ரூபாய்க்கு விற்கிறோம். அவற்றை பொதுமக்கள் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், கிரீன் டீ அதிகமாக விற்பனையாகும், பெரிய நிறுவனங்களில், எங்கள் தயாரிப்பை சந்தைப்படுத்த முடியவில்லை.
அரசு நிர்ணயிக்கும் அதிபட்ச சில்லறை விலை, மிகக் குறைவாக இருப்பதாக, கடைக்காரர்கள் நினைப்பதே அதற்கு காரணம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-http://www.dinamalar.com