காஷ்மீர் விவகாரம்: அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

Kashmir-Mapரஷியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் நடத்திய ஆலோசனையின்போது, காஷ்மீர் விவகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசித் தீர்க்க கருத்தொற்றுமை ஏற்பட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், காஷ்மீர் விவகாரம் இடம்பெறவில்லை என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மேற்கண்ட தகவலை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியதாக, அந்நாட்டுப் பத்திரிகையான “தி டான்’ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

காஷ்மீர், சியாச்சின், சர் கிரீக் ஆகிய பிரச்னைகளில், இரு தரப்பினரின் கருத்துகளை நன்றாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக, அந்த விவகாரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதை விடுத்து, வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது என இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றத்தைக் குறைக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. இரு நாட்டு ராணுவமும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது என்றும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது என்று சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

வரவேற்பும், எதிர்ப்பும்: இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃபும் சந்தித்துப் பேசியதற்கு பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, மோடியுடனான சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க நவாஸ் ஷெஃப் தவறிவிட்டதாக பல்வேறு கட்சிகள் விமர்சித்துள்ளன.

எனினும், இரு தலைவர்களின் சந்திப்புக்கு, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேவேளையில் காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டை நவாஸ் ஷெரீஃப் தெளிவாக எடுத்துரைக்கவில்லை என அக்கட்சி விமர்சித்துள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து, மற்றொரு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் குறிப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு வருமாறு ராஜீய நடைமுறைகளைத் தாண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது தேவையற்றதாகும் என்று கூறியுள்ளது.

“இந்தியா வரம்பு மீறினால் தக்க பதிலடி’

“”இந்தியா வரம்பு மீறி செயல்பட்டால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும்” என அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியாவின் உஃபா நகரில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், நவாஸின் நம்பிக்கைக்கு உரியவரான இஷாக் தார் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசி உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய ராணுவம் அழிப்பதாகவும், அதற்கு எதிராக பாகிஸ்தான் அரசின் நடவடிக்கை குறித்தும், அந்நாட்டு மேல்சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் வெள்ளிக்கிழமை கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசுகையில் நிதியமைச்சர் இஷாக் தார், மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் வழியாக, பாகிஸ்தான்-சீனா இடையே பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தை, இந்தியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த விவகாரம் குறித்து சீன தலைவர்களிடம் அண்மையில் இந்திய அரசு கவலை தெரிவித்தது. ஆனால், அதை சீனத் தலைவர்கள் நிராகரித்து விட்டனர். சர்வதேச அளவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொருளாதார ரீதியாகவும், போர் மூலமாகவும் பாகிஸ்தானுக்கு இந்தியா தீங்கு நினைத்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார் இஷாக் தார்.

-http://www.dinamani.com

TAGS: