மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு, மூன்றாவது முறையாக மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால் கேரளாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2014 நவம்பரில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால், புதிய அணை கட்டும் விவகாரத்தை கேரள அரசு மீண்டும் கையிலெடுத்து சர்ச்சை கிளப்புகிறது. மத்திய அரசின் வனம் மற்றும் உயிரியல் துறை அனுமதி பெற்று மே, ஜூன் மாதங்களில் முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட 45 நாட்கள் ஆய்வு நடத்தியது. புது அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே கேரள அரசு 2 முறை நடத்திய ஆய்வு தோல்வியில் முடிந்தது.
மூன்றாவது முறையாக புது அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் ‘தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவோம், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து இருப்பதால், அணைக்கு அருகே புதிய அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும். அப்பகுதி மக்களின் பாதுகாப்பு முக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, ‘முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள அரசின் சம்மதம் இல்லாமல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையை பாதுகாப்புக்கு அனுப்ப முடியாது’ என தெரிவித்திருந்தது. மேலும், புதிய அணை கட்ட ரூ.663 கோடியில் ஒரு திட்டத்தை தயாரித்து, அதற்கு அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கேரள அரசு சமர்ப்பித்தது.
புதிய அணை ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை மேற்கோள் காட்டி இப்போதைக்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு தற்போது கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இருமுறை அனுமதி மறுத்த மத்திய அரசு தற்போது மூன்றாவது முறையாக அனுமதி மறுத்துள்ளதால், கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மூத்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://www.dinakaran.com