லண்டன் : விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பாரம்பரியான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது.
விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா மிர்சா நிகழ்த்தினார். கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியான்டர் பயஸ் – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6-1, 6-1, என்ற நேர் செட்களில் அலெக்சான்டர் பெயா மற்றும் டிமியா பாபோஸ் ஜோடியை வீழ்த்தியது. இது லியாண்டர் பயஸ் வெல்லும் 16 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். இதற்கு முன் கடந்த 1990 ஆம் ஆண்டு விம்பிள்டன் ஜுனியர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதே லியாண்டரின்அதிகபட்ச விம்பிள்டன் சாதனையாக இருந்தது.
நேற்று நடைபெற்ற ஜுனியர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நகல், வியட்நாமை சேர்ந்த நாம் ஹாங் லீயுடன் இணைந்து இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா மற்றும் ஜப்பான் வீரர் அகிரா சான்டிலன் ஜோடியை 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஒற்றையர் ஜுனியர் பிரிவில் யுகி பாம்ரி கடைசியாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றிருந்தார். அதற்கு பின் தற்போது 17 வயது சுமித் நகல் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஜுனியர் பிரிவில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும் ஜுனியர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற 5 வது வீரர் என்ற பெருமையையும் சுமித் நகல் பெற்றார். இதற்கு முன் கடந்த 1954 ஆம் ஆண்டு ராமநாத கிருஷ்ணன் விம்பிள்டன் ஜுனியர் பிரிவில் பட்டம் வென்றார். ரமேஷ் கிருஷ்ணன் 1979 ஆம் ஆண்டு விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்றார். தொடர்ந்து லியாண்டர், யுகி பாம்ரி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றனர். தற்போது அந்த வரிசையில் சுமித் நகல் இணைந்துள்ளார்.