கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்! சுப்பிரமணியன் சுவாமி தகவல்

jaya_america_001ஜெயலலிதா எந்த நேரத்திலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் யூலை 1ம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.

யூலை 4ம் திகதி தலைமைச் செயலகம் வந்த முதல்வர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார். அன்று பகலில் செல்வதாக இருந்த கொடநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வரவில்லை. இதன் காரணமாக முதல்வரின் உடல்நிலை குறித்த பல்வேறு செய்திகள் பரவின.

இந்நிலையில் ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்றும், கால்களின் இரண்டு மூட்டுகளிலும் அதிக வலி அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சைக்கான சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறார்.

இருப்பினும் வலி குறைந்தபாடில்லை. அதனால் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், திமுகவும், காங்கிரசும், அவரது உடல் நிலை குறித்த ஐயப்பாடுகளை எழுப்பிய படியே உள்ளன.

இந்நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பதிவு செய்துள்ள டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “ஜெயலலிதா எந்த நேரத்திலும் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம். மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அதிமுக தரப்பிலோ, முதல்வர் தரப்பிலோ, இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

-http://www.newindianews.com

TAGS: