1200 படங்கள்.. பல ஆயிரம் பாடல்கள்… பல நூறு பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்… இப்படி நினைத்துப் பார்க்க முடியாத பெருமைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான எம் எஸ் விஸ்வநாதனுக்கு, இந்த அரசுகள்..
நாடு திரும்பக் கொடுத்த மரியாதை என்ன? ஒன்றுமே இல்லை. ‘அவருக்கு எதுக்கு மரியாதை.. விருது.. பணம் வாங்கினார்.. பாட்டுப் போட்டார். இது சினிமா வியாபாரம்தானே’ என சிலர் கேட்கக் கூடும். மிகத் தவறான வாதம்.
பல ஆண்டுகளுக்கு முன்பே பாரத ரத்னா பெற்ற லதா மங்கேஷ்கரையோ, இதோ இப்போது பல சர்ச்சைகளுக்கிடையே வாங்கிய சச்சின் டெண்டுல்கரையோ இப்படிக் கேட்டால் பொறுத்துக் கொள்வார்களா…
ஆனால் இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய பங்களிப்பை திரை இசைக்குத் தந்த, நல்ல இசை தந்த ஒரு மாமேதையை இந்த நாடு கவுரவிக்கத் தவறியிருக்கிறது. அவர்தான் எம்எஸ் விஸ்வநாதன். இதுவரை அவருக்கு ஒரு படத்துக்குக் கூட சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது..
அட மாநில அரசு விருது கூட அவருக்குக் கிடைத்ததில்லை. அவர் இசையமைத்த பல நூறு படங்கள் பெரும் வெற்றிப் படங்கள். பல ஆயிரம் பாடல்கள் மக்களின் நெஞ்சில் குடிகொண்ட காவிய கீதங்கள். இந்த விருது அரசியல் பற்றி அவர் அக்கறை கொண்டதில்லை என்றாலும், இவருக்கு உரிய மரியாதை செய்யுங்கள் என தமிழ் திரையுலகினரும், மீடியாக்களும் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை மத்திய அரசு.
தமிழகத்தின் எந்தக் கோரிக்கையைத்தான் அவர்கள் மதித்திருக்கிறார்கள். மாநில அரசு மட்டுமென்ன… எந்த மாநில அரசு அங்கீகாரத்தையும் அவருக்கு வழங்கவில்லை. வாழ்நாள் சாதனைக்கான எம்ஜிஆர் விருதையாவது தந்திருக்கலாம். அதைக்கூடத் தரவில்லை. இத்தனைக்கும் இந்த மனிதர் எந்த விருது அரசியலிலும் இம்மி அளவுகூட ஈடுபாடு காட்டாதவர்.
கூப்பிட்ட கூட்டங்களுக்கு தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் போய் வந்தவர். எம்எஸ்வி பெற்ற ஒரே அரசு விருது கலைமாமணி. அதற்கான மதிப்பு என்ன என்பதை பத்திரிகை படிக்கும் அத்தனைப் பேரும் அறிவார்கள் (முதல்வர் ஜெயலலிதா கொஞ்சம் பரவாயில்லை. ஜெயா டிவி நிகழ்ச்சில் பொன் முடிப்பும், வாழ்நாள் சாதனைக்கு ஒரு விருதையும் கொடுத்தார்).
சரி, தேசிய, மாநில விருதுகள்தான் கிடைக்கவில்லை. அவரது சாதனையை மதித்து ஒரு பத்ம விருதாவது கொடுத்திருக்கலாமே… ம்ஹூம் அதுவும் வழங்கப்படவில்லை. ஏன்…
அது எம்எஸ்விக்கே புரியாத விஷயம். ஒரு பேட்டியில் இதுகுறித்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்: “நான் எதையும் எதிர்ப்பார்த்ததில்லை. எனக்கு என்ன நடக்கிறதுன்னும் தெரியாது.
இசையமைப்பது ஒன்றைத் தவிர வேற ஒண்ணும் எனக்குத் தெரியாது. அந்த இசைக்கு மக்கள் பெரிய மதிப்பு கொடுத்திருக்காங்க. அந்த ஒண்ணு போதும்.”
isaikku ilakkiya anthashthu thedi thanthavar. inayilla methai.