20 தமிழர் படுகொலை.. ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் வைகோ.. நேரம் கேட்டு கடிதம்

andhra-policeசென்னை: ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.

திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் நடந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும். அதை 20 பேர் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். அதேபோல், தனித்தனியாக 20 கொலை வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் மனித உரிமைக்காக குடிமக்கள் இயக்கத்தினரும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

andra20இந்த நிலையில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக ம.தி.மு.க. தலைமையகம் தாயகத்தில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தை சார்ந்த ஹென்றி திபேன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா, கொளத்தூர் மணி, ஆகியோர் இந்தக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதென முடிவு செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்திப்பதற்காக தமிழக முதல்வர் நேரம் ஒதுக்கி தரக் கோரி வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: