இந்தியா- பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதுதொடர்பாக வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலவும் வன்முறை தொடர்பான பத்திரிகை செய்திகளை பார்த்தோம். இதுபோன்ற வன்முறையால், இரு நாடுகளின் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறார்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் குறைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பமாகும்.
எனவே, பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை இரு நாடுகளும் இணைந்து எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று கிர்பி கூறினார்.
இந்திய எல்லையில் உள்ள கிராமப் பகுதிகள் மீதும், பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீதும் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதால், இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இதேபோல், இரு நாடுகள் இடையே கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவரிடம், இந்திய – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவதற்கு தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார் ஜான் கெர்ரி. அண்டை நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்தத் தவறான புரிதலுக்கும் அல்லது தவறான கணிப்புக்கும் இடம்தரக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinamani.com