பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு: மத்திய அரசு

Minor-girl-rape“பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் “புகார் குழு’ என்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். ஒருவேளை ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் பெண் அதிகாரி இல்லையெனில், வேறு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி, குழுவின் தலைவராக இருப்பார்.

மேலும், அந்தக் குழுவில் உள்ளவர்களில் பாதியளவுக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருப்பார்கள்.
இந்நிலையில், இந்தப் புகார் குழுக்களுக்கு புதிய வழிகாட்டும் விதிமுறைகளை மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை

வெள்ளிக்கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பாலியல் புகார்களை அலட்சியமாகவோ, யதேச்சாதிகாரத்துடனோ விசாரிக்கக் கூடாது.

பாதிக்கப்பட்ட பெண் அல்லது குற்றம்சாட்டப்பட்ட அலுவலருக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு பரிந்துரைக்க புகார் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்குவதற்கு பரிந்துரைக்கவும் அதிகாரம் உள்ளது.

பாலியல் புகார் தொடர்பான விசாரணைகளில், தன்னார்வ அமைப்பு அல்லது பாலியல் குற்றங்களுக்காக போராடும் பிரபல அமைப்பை மூன்றாவது நபராக புகார் குழு அனுமதிக்க வேண்டும். பாலியல் தொந்தரவுக்குள்ளான 3 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய பரிந்துரைக்கவும், அந்தத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் புகார் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

ஒருவேளை, உள்நோக்கத்துடனோ, தவறாகவோ, போலி ஆதாரங்களைக் காட்டியோ பாலியல் புகார் கொடுத்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு எதிரான ஆதாரங்களை கொடுக்க விரும்பும் சாட்சிகளை மிரட்டினோலா, அச்சுறுத்தினாலோ அந்தப் புகார்களைக் கொடுத்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புகார் குழுவுக்கோ, அந்தக் குழுவின் உறுப்பினர்களுக்கோ, விசாரணை அதிகாரி உள்ளிட்டோருக்கோ மிரட்டல் விடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: