1200 பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

ramadasசென்னை, ஜூலை 20–

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 40 வயதைக் கடந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள் என எந்தப் பிரிவினரை எடுத்துக் கொண்டாலும் அவர்களில் 90 விழுக்காட்டினர் அரசு பள்ளிகளில் படித்தவர்களாகத் தான் இருப்பார்கள். ஒரு கால கட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பது உண்மை தான். அதேபோல், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் முன் வருவதில்லை.

அரசு பள்ளிகளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது உண்மையாகவே வருத்தமளிக்கிறது. ஆனால், இந்த நிலைமைக்கு ஆசிரியர்களையோ, பெற்றோர்களையோ குறை கூற முடியாது என்பது தான் மறுக்க முடியாத, ஏற்க வேண்டிய உண்மை.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதைக் காரணம் காட்டி அரசு பள்ளிகளை மூடுவது அறிவுடைமையாக இருக்காது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படித்தால் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் என்ற மூட நம்பிக்கை மக்களின் மனதில் விதைக்கப்பட்டது, அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகியவை தான் அரசு பள்ளிகள் மீதான மரியாதையும், விருப்பமும் குறைந்ததற்கு காரணம் ஆகும்.

இந்த காரணங்களால் ஊருக்கு ஊர் ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படுவதும், ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்ற தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அப்பள்ளிகளுக்கு மாணவர்கள் கவர்ந்து இழுக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் தனியார் பள்ளி வாகனங்கள் வந்து மாணவர்களை ஏற்றிச் செல்வது அன்றாடக் காட்சியாகி விட்டது.

ஆனால், தமிழக அரசோ இவற்றை உணராமல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை கொண்டு வந்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்து விடும் என்று நம்பி எல்லா பள்ளிகளிலும் ஆங்கில வழியை அறிமுகம் செய்து வருகிறது.

அடித்தளத்தை வலுவாக அமைக்காமல் அதன் மீது எத்தனைத் தளங்களைக் கட்டினாலும் அவை நிலைக்காது என்பதை உணர அரசு மறுக்கிறது. அரசு பள்ளிகள் அனைத்திலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், போதிய அளவில் ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். அதன் மூலம் தான் அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.

ஆனால், தமிழகத்தில் ஊரகப்பகுதிகள் உள்ள 48 சதவீதம் தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு வகுப்பறைகள் மட்டுமே இருப்பதாகவும், இரு ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டியிருப்பதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதி கூட செய்து தரப்படவில்லை.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:24 ஆக குறைந்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உண்மையில், அதிக அளவில் ஆசிரியர்களை நியமித்ததன் மூலம் இந்த நிலை எட்டப்பட்டிருந்தால் பெருமைப்பட வேண்டியது தான். ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து இந்த நிலை எட்டப்பட்டிருப்பது தான் வேதனையளிக்கிறது. இந்த ஆசிரியர்களும் கூட தேவைப்படும் பள்ளிகளில் நியமிக்கப்படாமல், நகர்ப்புற பள்ளிகளில் தான் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள், கழிப்பறை வசதி கூட இல்லை என அவலங்களின் உச்சமாக ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் திகழ்ந்தால் அவற்றில் பிள்ளைகளைச் சேர்க்க எந்த பெற்றோரும் முன் வர மாட்டார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

மாணவர்கள் போதிய அளவில் இல்லை என்பதற்காக பள்ளிகளை மூடுவது பொறுப்பற்ற செயலாகும். இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் அனைத்து அரசு பள்ளிகளும் மூடப்பட்டு, தனியார் பள்ளிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும். இது மிகவும் ஆபத்தானதாகும்.

எனவே, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி, 1200 பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். மாறாக இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, குறைந்த அளவில் மாணவர்கள் உள்ள 1200 பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக அறிவித்து மேம்படுத்த வேண்டும். அவற்றில் தரமான கல்வி வழங்குவதன் மூலமும், இத்தகைய பள்ளிகளை அதிகரிப்பதன் மூலமும் அடுத்த சில ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் போட்டிப்போடும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

-http://www.maalaimalar.com

TAGS: