அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு: கோபத்தில் எம்.எல்.ஏவை கட்டி வைத்த கிராம மக்கள்

up_powercut_001உத்திரபிரதேசத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் கோபமடைந்த கிராம மக்கள் அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை கட்டி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின் வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் பலன் இல்லை.

இந்நிலையில், இந்த பிரச்சனைகளால் கோபத்தில் இருந்த அப்பகுதி மக்கள், அங்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வான பப்பான் சிங் செளவுகானையும், கவுன்சிலர் கயாமுதினையும் சிறை பிடித்தனர்.

மேலும், பலமணி நேரம் அவர்களை கயிற்றில் கட்டி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர், எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலரை விடுதலை செய்யும்படி கிராம மக்களிடம் சமாதானம் செய்தார்.

மேலும், விரைவில் உங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று எம்.எல்.ஏ.வும் காவல்துறை கண்காணிப்பாளரும் வாக்குறுதி அளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் எம்.எல்.ஏ.வையும், கவுன்சிலரையும் விடுவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது எம்.எல்.ஏ. புகார் அளிக்காததால் பொலிசார் யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: