குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்தில் புதிதாக 11 சிங்கக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நான்கு சிங்கங்கள் கர்ப்பமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கிருந்த 10 ஆசியச் சிங்கங்கள் கொல்லப்பட்டுவிட்டன. ஆனால், அங்கிருந்த 11 சிங்கக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
குஜராத்தில் உள்ள கிர் சரணாலயம்தான், இந்தியாவில் சிங்கங்கள் வசிக்கும் பிரதான பகுதியாகும்.
ஒருகாலத்தில் குஜராத் முழுக்க பெரிய அளவில் வசித்த சிங்கங்கள், வேட்டையாடுதலின் காரணமாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மிகவும் குறைந்துவிட்டன.
ஆனால், சிங்க வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை, அவற்றைக் காப்பதற்கான முயற்சிகள் ஆகியவற்றின் காரணமாக, அவற்றின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
2010ல் 411ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2015ல் 523ஆக உயர்ந்திருப்பதாக குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் படேல் கடந்த மே மாதம் அறிவித்தார். -BBC