30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்.. குற்றவாளியின் ஒப்புதலைக் கேட்டு போலீஸ் அதிர்ச்சி

30டெல்லி : கைது செய்யப்பட்ட குற்றவாளி தான் 30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது ஒட்டு மொத்த போலீசாரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர் குமார் என்ற பயங்கரமான தொடர் பாலியல் பலாத்கார கொலைக் குற்றவாளி, ஜூலை 16-ம் தேதியன்று கைது செய்யப்பட்டான். இதுவரை 30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக அவன் விசாரணையில் ஒப்புகொண்டுள்ளான்.

இது குறித்து பேசிய காவல்துறை உதவி ஆணையர் விக்ரம்ஜித் சிங் 30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ரவீந்தர் குமார் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இந்தக் குற்றச்செயல்கள் பெரும்பாலும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடந்துள்ளதாகவும் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநில காஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் குமார், டெல்லியில் வசித்து வந்துள்ளார். விசாரணைக்காக நரேலா, பவானா, அலிபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குமாரை போலீஸார் அழைத்து சென்றனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லும் போதுதான் இவனால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிகள் பற்றிய விவரமே போலீசாருக்கு தெரியவந்தது. இதுவரை குமாரின் தொடர் கொலைகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கலாம் என்றே போலீஸ் தரப்பில் கருதப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் விஜய் நகர், பவானா, நரேலா, அலிபூர், பேகம்பூர், கஞ்சாவாலா, சமய்பூர், பாத்லி, மற்றும் பல இடங்களில் காணாமல் போன சிறுமிகள் பற்றிய பல புகார்கள் பதிவானது குறித்து தீவிர விசாரனையை டெல்லி போலீசார் மேற்கொண்டனர். 2008-ம் ஆண்டு முதல் ரவீந்திர குமார் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று போலீசார் தற்போது சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பேகம்பூரில் சிறுவன் ஒருவனை தாக்கியதாக ரவீந்தர் குமாரை போலீஸ் கைது செய்தது. இந்தச் சிறுவனை கடத்தி அவனது தொண்டையை கத்தியால் அறுத்து விட்டு ரவீந்தர் குமார் தப்பிச் சென்றான். அந்தச் சிறுவன் இறந்து விட்டதாக குமார் தவறாக நினைத்துள்ளார். ஆனால் கட்டடம் ஒன்றின் கழிவு நீர்த் தொட்டியில் ரத்த வெள்ளமாகக் கிடந்த சிறுவனை போலீஸார் மீட்டனர். ஆனால் அப்போது குமாரை விட்டுவிட்டது போலீஸ்.

அதன் பிறகு 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த புகார் தொடர்பாக ரவீந்தர் குமார் கைது செய்யப்பட்டான். இதன்பிறகே ஒரு சீரியல் ரேபிஸ்ட் மற்றும் கொலையாளி என ரவீந்தர் குமாரை டெல்லி போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: