பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம்! தமிழர் உணர்வோடும் உயிரோடும் விளையாடுவது பேராபத்து என எச்சரிக்கிறோம்!!

Velmurugan_tvkராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம்! தமிழர் உணர்வோடும் உயிரோடும் விளையாடுவது பேராபத்து என எச்சரிக்கிறோம்!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களையும் விடுதலை செய்வது பற்றிய வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை எடுத்துக்காட்டி தமிழக அரசு மிகவும் ஆணித்தரமாக வாதிட்டு வருவது பாராட்டுக்குரியது; 7 தமிழர் விடுதலையை வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் ஆளும் மாநிலங்களே கூட தமிழக அரசின் கருத்துக்கே வலுச்சேர்க்கும் வகையில் வாதிட்டுள்ளன. ஏனென்றால் இது மனித உரிமைச் சிக்கல் மட்டுமல்ல, மாநில உரிமைச் சிக்க்கலுமாகும்.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் கவனத்தையும் நாட்டின் கவனத்தையும் திசை திருப்பும் விதத்தில், இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மீண்டும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கோருகிறது இந்திய மத்திய பேரரசு.

இது ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள, மூன்று தமிழரின் தூக்கை ரத்து செய்த தெளிவான இறுதித் தீர்ப்பை மாற்ற முயற்சிப்பதாகும். அப்போதைய காங்கிரஸ் அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இத்தனைக் காலம் கழித்து இப்போது திடீரென தற்போதைய பாரதிய ஜனதா அரசு திருத்த மனு (கியூரேடிவ்  பெட்டிசன்) என்ற பெயரில் இந்த வழக்கை தொடர்ந்திருப்பது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. அப்பட்டமான தமிழின விரோதச் செயல்.

தமிழக அரசுக்கும் தமிழக மக்களுக்கும் இந்தியப் பேரரசு எப்போதுமே எதிரானது; எதிரியாகத்தான் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபணம் செய்கிறது இந்த புதிய மனு.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் இந்த வக்கிர தமிழின விரோத மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதியாக தள்ளுபடி செய்து விடும் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை.

தமிழக அரசின் முயற்சிக்கு வெற்றி கிட்டும் வகையில் பேரறிவாளன் முதலான 7 தமிழர்கள் மட்டுமல்லாமல், நீண்ட பல ஆண்டுகளாகச்  சிறையில் வாடும் ஆயுள் சிறைகைதிகள் பலரும் விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதும் உறுதி. மனித உரிமைகள் வரலாற்றில் தமிழகம் புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது என்பதும் நிதர்சனம்.

7 தமிழர் தூக்கு போன்ற பிரச்சினையில் இப்படி புதிய மனுக்களைத் தாக்கல் செய்து தமிழ் மக்களின் உயிர்களோடும் உணர்வுகளோடும் விளையாடிப் பார்க்கும் மத்திய இந்திய பேரரசின் விளையாட்டு அதற்கு நினைத்துப் பார்க்க முடியாத பேராபத்தாகவே முடியும் என்ற எச்சரிக்கையை டெல்லி மேலிடத்துக்குத் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் உணர்த்த வேண்டும். அதைவிட்டுவிட்டு “சட்டம் வேறு- அரசியல் வேறு; டெல்லி மேலிடத்தின் கருத்து வேறு- எங்கள் சொந்த கருத்து வேறு” என விதண்டவாதம் பேசுவதை தமிழினம் பொறுத்துக் கொண்டிருக்காது. தக்க பதிலடி கொடுத்தே தீரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித உரிமைகளுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிராக முந்தைய காங்கிரஸ் அரசைப் போல தற்போதைய பாரதிய ஜனதா அரசும் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பேரரசின் இத்தகைய அடாவடி முயற்சிகளை முறியடிக்கத் தமிழக மக்கள் ஓரணியில் திரண்டு போராடும் படி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அறைகூவி அழைக்கிறேன்.

பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

-http://www.pathivu.com

TAGS: