காற்று மாசு; தில்லியில் தினமும் 80 பேர் உயிரிழப்பு: மாநிலங்களவையில் அதிர்ச்சித் தகவல்

mal_airicon_001தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக தினமும் சுமார் 80 பேர் உயிரிழப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

தில்லி வாசிகளின் உடல்நலக் குறைவுக்கும், உயிரிழப்புக்குமான காரணிகளில் ஒன்றாக காற்று மாசுபாடு உள்ளது. குறிப்பாக காற்றில் இருக்கும் நுன் துகள்கள் இதற்கு காரணம். சமீபத்தில் வெளியான சர்வதேச ஆய்வு முடிவின்படி, தில்லியில் உள்ள காற்று மாசுபாடு காரணமாக தினமும் 80 பேர் உயிரிழக்கின்றனர்.

ஆக்கப்பூர்வ மதிப்பீடுகள் மற்றும் தகவல் கணிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தில்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக அரசு இதுவரை 2 ஆய்வுகளை மேற்கொண்டது.

“தில்லியில் உள்ள மக்களின் சுகாதாரத்தில் காற்று மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கங்கள்’ என்ற தலைப்பில் 2002-2005 காலகட்டத்திலும், “சுற்றுப்புற காற்றுத் தரம், தில்லியில் உள்ள குழந்தைகளின் சுவாச மற்றும் நுரையீரல் செயல்பாடு’ என்ற தலைப்பில் 2003-2005 காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வுகளின்படி, காற்றில் உள்ள நுன் துகள்களினால், குரோமோசோம்கள், மரபணு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுவாசம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனத் தெரியவந்துள்ளது என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: