தமிழ் நாட்டில் இன்று எல்லா அரசியல் கட்சிகளும், அஇஅதிமுக வைத் தவிர்த்து மதுவிலக்கைப் பேசத் துவங்கி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக மது விலக்கைப் பேசி வந்தது. கடந்த ஓராண்டாக, அதுவும் குறிப்பாக அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர் மதுவிலக்கிற்கு ஆதரவான அதன் பிரச்சாரம் அதிக வேகம் பிடித்தது.
மதுவிலக்குக் கோரி பாமக நடத்தும் கூட்டங்களில் கூடும் கூட்டம் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு அதிகரிக்கத் துவங்கியது. இது வாக்குகளாக மாறுமா என்பது வேறு விஷயம். ஆனால் கூடும் கூட்டம் திமுக வை நிமிர்ந்து உட்கார வைத்து விட்டது. ஜூலை 20 ம் தேதி இரவு திடிரென்று எட்டரை மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி அவசர அவசரமாக விடுத்த ஓர் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல் படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
மதுவிலக்கு இல்லாததால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், மாணவர்களும் கூட மதுவுக்கு அடிமையாவதாக அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். அவசர அவசரமாக, அதுவும், இரவு எட்டரை மணிக்கு மதுவிலக்குப் பற்றி கருணாநிதி அறிவிப்பதற்கு காரணம் அன்று காலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்தான் என்று கூறப்படுகிறது.
மே 23 ம் தேதி முதலைமச்சராக பொறுப்பேற்றப் பின்னர் ஜெயலலிதா முதன்முறையாக நடத்திய அமைச்சரவை கூட்டம் அது. பத்து நிமிடங்கள் மட்டுமே இந்தக் கூட்டம் நடந்தது. இதில் இலவசங்களை வழங்க போதிய நிதியாதாரம் இல்லை என்றும், ஆகவே டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்குவதுதான் ஓரே வழியென்றும் பேசப் பட்டதாகத் தெரிகிறது. இதற்காக சாதாரண டாஸ்மாக் கடைகளைத் திறந்தால் வருவாய் போதாதென்றும் மாறாக எலைட் டாஸ்மாக் கடைகள் எனப்படும் உயர் ரக மது பானங்களை விற்கும் கடைகளை திறக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் 226 எலைட் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்யப் பட்டதாக அடுத்த சில நாட்களில் வந்த ‘தமிழ் முரசு,’ ‘தினத் தந்தி’ உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்த விஷயத்தை ஜூலை 20 ம் தேதி மாலையிலேயே அறிந்து கொண்டு விட்ட காரணத்தால்தான் கருணாநிதி இரவு எட்டரை மணிக்கே அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல மதுவிலக்குப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இது கருணாநிதியின் வழக்கமான அரசியல்தான். தற்போது ஜெயலலிதாவுக்கு வேறு வழியில்லை. மதுவிலக்கை அவர் அமல்படுத்தா விட்டாலும் அந்த திசையில்தான் பயணித்தாக வேண்டும். காரணம் கருணாநிதி மதுவிலக்கு கேட்கும் போது ஜெயலலிதா எலைட் மதுக் கடைகளை திறந்தால் எழக்கூடிய அரசியல் விமர்சனமும், தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில் அதற்குக் கொடுக்க வேண்டிய விலையையும் ஜெயலலிதா அறியாதவரல்ல.
ஒரு பக்கம் பாமக வின் பிரதான அஸ்திரத்தை அவர்கள் கையிலிருந்து பிடுங்கியதுடன், மற்றோர் பக்கம் ஜெயலலிதா வை ஒரு நெருக்கடியான நிலைக்கும் கருணாநிதி தள்ளி விட்டார். அரசியலைப் பொருத்தவரை ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கக் கூடிய கருணாநிதி, இன்று இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார். ஆனால் பிரச்சனை மிகப் பெரியது.
தமிழகத்தின் இன்றையை பொருளாதார, சமூக சூழலில் மது விலக்கு சாத்தியமா? மற்றொன்று மது விலக்கு, இன்று தமிழக்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாத்தியமா என்பதுதான். முதல் விஷயம், தமிழகம் இன்று பொருளாதார, சமூக ரீதியாக மதுவிலக்கைத் தாங்குமா என்பதுதான். 2014 -15 ம் ஆண்டுக்கான டாஸ்மாக் வருவாய் தமிழகத்திற்கு 26,295 கோடி ரூபாயாகும். இது 2015 – 16 க்கு 30,000 கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருவாயை அரசு இழக்க வேண்டுமானால், இதற்கிணையான வருவாயை மற்ற வரிகள் மூலம் தேட வேண்டும்.
ஆனால் காலம் காலமாய், அரசியல் தலையீட்டின் காரணமாக சொத்து வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதில் காணப்படும் சுணக்கம் இந்த பணியை இயலாததாக ஆக்கியிருக்கிறது. மற்றோன்று ஆண்டுதோறும் அதிகரித்து வரும் செலவினங்கள். ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் இலவசங்கள் போன்றவை. ஆகவே ஒரு பக்கம் மாநிலத்தின் வரி வருவாயில் 30 சதவிகிதமாக இருக்கும் டாஸ்மாக் வருமானம் குறைவதும், மறு பக்கம் அரசின் செலவினங்கள் ஏகத்துக்கும் அதிகரிப்பதும் தமிழக பொருளாதாரத்தை சிதைத்துவிடும்.
இதில் இலவசங்களைக்குச் செலவிடப்படும் தொகையை விட ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான தொகைதான் பெரியது. ஆகவே பழியை இலவசங்கள் மீது போடுவது உண்மைக்கு மாறானது. இன்னோர் பெரிய சுமையாக அரசின் தலையில் விடியக் காத்திருப்பது 7வது ஊதியக் குழு பரிந்துரைகள். விரைவில் இந்த பரிந்துரைகள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது இதனை தாங்கள் நிறைவேற்றுவோம் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுத்து விடும். இது அரசின் ஊதிய மற்றும் ஓய்வூதிய சுமையை மேலும் அதிகமாக்கும். அடுத்த முக்கிய விஷயம், டாஸ்மாக்கில் பணியாற்றும் 27,000 ஊழியர்கள். இவர்கள் திடிரென்று தெருவுக்கு வருவதும், பார்களிலும், எரிசாராய ஆலைகளிலும் பணியாற்றும், மறைமுக வேலை வாய்ப்பில் இருக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஊழியர்கள் பணியிழப்பதும் எத்தகையை கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்காமலா கருணாநிதி இந்த அறிக்கையை விட்டிருப்பார் என்பது ஆச்சர்யமளிக்கிறது.
இவை எல்லாமே சமாளிக்கக் கூடிய பொருளாதார நிலைமைகள்தான் என்று வைத்துக் கொண்டாலும், இதை விட மிக, மிக முக்கியமானது, இன்றைய நவீன உலகில் மது விலக்கு என்பது, இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் மட்டும் அமல்படுத்தப் படக்கூடிய சாத்தியம் உள்ளதுதானா என்பதுதான்? 1991 ம் ஆண்டுக்குப் பிந்தய, நாடுகளைக் கடந்த வர்த்தக சூழல் எந்தப் பொருளையும் யாரும் எங்கும் வாங்கலாம், விற்கலாம் என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா பல நாடுகளுடனும், உலக வர்த்தக நிறுவனத்தின் (டபிள்யூ. டி. ஓ) விதிகளின் படி பல பொருட்களின் கீழ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் மதுபானங்களும் அடக்கம். வேண்டுமானால், ஓரிரு மாநிலங்கள் தங்களது கொள்கைகளை காரணம் காட்டி இதனை சில மாதங்களுக்குத் தடுக்கலாம். ஆனால் நிரந்தரமாக தடுக்க முடியாது. காரணம் இந்திய சந்தை தங்களுக்குத் திறந்து விடப் படும் என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில் ஒப்பந்தங்களைப் போட்ட நாடுகள் இதில் பெரும் சட்டப் பிரச்சனைகளை கிளப்பலாம்.
அடுத்தது இன்று ஒரு பொருளை வாங்க நினைக்கும் ஒருவர் அது தனது ஊரிலேயோ அல்லது மாநிலத்திலேயோ இல்லையென்றாலும் வாங்கக் கூடிய சூழல் வந்து விட்டதுதான். இதுதான் ஈ காமெர்ஸ் எனப்படும் மின்னணு வர்த்தகம். வீட்டிலிருந்த படியே, இணையம் மூலம், ஃபிளிப்கார்ட், அமேசான், மைந்திரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூலம் வேண்டிய மதுபானங்களை வாங்கக் கூடிய சூழல் வரலாம். தடை செய்யப் பட்ட பொருள் இது என்று அரசு நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் இவை எல்லாமே கட்டுப் படுத்துவதற்கு மிக, மிக கடினமான காரியங்கள்.
போதைப் பொருட்களையும், ஆயுதங்களையும், ஃபிளிப்கார்ட், அமேசான் மூலம் வாங்குவதை, தடுக்கக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கவனத்தை, திறமையை மதுபான வகைகளைத் தருவிப்பதைத் தடுப்பதில் போலீஸ் ஒரு போதும் காட்ட முடியாது. இது பிரச்சனையின் இன்னோர் மிக முக்கியமான, மது விலக்கு கோரி போராடுபவர்கள் கவனிக்கத் தவறும் விஷயமாகும்.
அடுத்தது அமல்படுத்துவதில் இருக்கும் பெருஞ் சிக்கல்கள். 1974 ம் ஆண்டு மும்பையிலிருந்து வெளிவரும் ‘எகனாமிக் அண்டு பொலிட்டிகல் வீக்லி’ என்ற பத்திரிகை வெளியிட்ட தலையங்கம் இதனை துல்லியமாக விவரிக்கிறது. மதுவிலக்கு வந்தவுடனேயே கள்ளச் சாராயம் வந்து விடும். கள்ளச் சாராயத்துடன் சேர்ந்து மற்ற குற்றவியல் நடவடிக்கைகளான கூலிப் படைகளின் கொலை, கொள்ளை அராஜகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிடும்.., குறிப்பாக கிராமங்களில் என்று துல்லியமாக விவரிக்கிறது இந்த தலையங்கம்.
மதுவிலக்கை எந்த காவல்துறை அதிகாரியும் விரும்பவும் மாட்டார். காரணம் மது விலக்கால் அதிகம் பணிச்சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவது காவல் துறையினர்தான். அவர்கள் தான் இதனை அமல்படுத்தும் முதல் வளையத்தில் இருப்பவர்கள். மறைந்த காவல்துறை உயரதிகாரி ரவி ஆறுமுகம் 18 ஆண்டுகளுக்கு முன்னாள் என்னிடம் சொன்ன தகவல் சுவாரஸ்யமானது. ‘எந்தவோர் மாவட்ட எஸ்.பி யும் மதுவிலக்கை விரும்ப மாட்டார். காரணம் 24 மணி நேரமும் அவரது கவனம் முழுவதும் தனது மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை யாராவது காய்ச்சுகிறார்களா என்பதிலேயே இருக்கும். இதனை அவரால் தடுக்கவும் முடியாது, இதனால் உருவாகக் கூடிய கிரைம் சிண்டிகேட்டை அவரால் கட்டுப்படுத்தவும் முடியாது.
மது விற்பனை சீராகவும், முறையாகவும் இருப்பதுவே ஒரு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப் பட அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று’ என்று அவர் கூறினார். 18 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இதனை கூறினாரென்றால் தற்போது இருக்கும் சிக்கலான சூழலில் போலீஸ் மீது மதுவிலக்கு ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் அபரிமிதமான மதுவால் இன்று நிலவும் கேவலமான நிலைமை மது விலக்கை நோக்கி – அது சாத்தியமோ, சாத்தியமில்லையோ – உந்தித் தள்ளிக் கொண்டு இருப்பது போலத்தான் தெரிகிறது.
இன்று தமிழகத்தில் உள்ள நிலைமை, அரசாங்கம் மதுவை விற்பதை தாண்டி, மதுவை பிரமோட் பண்ணிக் கொண்டிருக்கிறது. இலக்கு நிர்ணயித்து நடக்கும் மது விற்பனையும், எந்த நியாய, தர்மங்களுக்கும் கட்டுப் படாமல், தெருத் தெருவாக, பள்ளிகள், கல்லூரிகள், வழிப் பாட்டுத் தலங்களின் அருகாமையில் கண்ட மேனிக்கு கடைகள் திறக்கப்படுவதும்தான் இன்று தமிழகத்தில் மதுவை வெள்ளமாய் ஓடச் செய்து கொண்டிருக்கிறது. கடிகாரத்தின் பெண்டுலம் இன்று ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறது. இது இனி மற்றோர் ஓரத்திற்கு ஓடிப் போய் நிற்கப் போகிறது. பெண்டுலம் நடுவில் நின்றால்தான் கடிகாரத்தின் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கிறதென்று பொருள்.
கூச்ச நாச்சமின்றி மதுவை பிரமோட் பண்ணிக் கொண்டிருக்கும் தமிழக அரசு திடீரென்று இன்னோர் முனைக்கு போய் நின்றால், அதாவது மது விலக்கை அமல் படுத்தினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் இதன் விளைவு மீண்டும் சில மாதங்களிலேயே மது விலக்குத் தளர்த்தப்படும் சூழலை உருவாக்கும். பிறகு பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.
கடந்த இருபதாண்டுகளில் ஆந்திராவிலும், ஹரியாணாவிலும் மதுவிலக்கு தீவிரமாக அமல் படுத்தப்பட்டு பின்னர் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் பட்டது. இதிலிருந்து தமிழகத்தில் பூரண மது விலக்குக் கேட்போர் பாடம் கற்க மறுக்கின்றனர். மதுவை புரமோட் செய்யும் தவறான கொள்கையைத்தான் இந்த அரசு கைவிட வேண்டும். ‘கடுகளவு அறிவுள்ளவன் கூட பூரண மதுவிலக்கைக் கேட்க மாட்டான்’ என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னதை நினைவு கூர்கிறேன்.
60 ஆண்டுகளுக்கு முன்பு, உலகப் பொருளாதாரம் பின்னிப் பிணையாத காலத்திலேயே பெரியார் இதைச் சொன்னார் என்றால், இன்றைய நவீன உலகில் இதன் சிக்கலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். போகிற போக்கைப் பார்த்தால் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்குத்தான் பிரதான கோஷமாக இருக்கப் போகிறது.
வழக்கமாக எந்தவோர் விஷயத்திலும் எதிர்கட்சிகள் எட்டடி பாய்ந்தால், 16 அடியல்ல, 160 அடிப் பாயும் ஜெயலலிதா இந்த விஷயத்தில் அதிரடியாக ஏதாவது செய்து, திடிரென்று எல்லா டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடினாலும் ஆச்சரியமில்லை. ஆனால் அதற்கு சமூகம் கொடுக்க கூடிய விலையும், அரசு கஜானா அடையக் கூடிய பெரு நஷ்டமும் சொல்லி மாளாதவையாக இருக்கும்.
தமிழகத்தின் தற்போதய தேவை கிஞ்சித்தும் நடைமுறைக்கு ஒவ்வாத கோஷங்கள் அல்ல, மாறாக காலத்திற்கேற்ற கொள்கைகள்தான். மது விற்பனையை முறைப் படுத்துவது, கட்டுப் படுத்துவது, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அவற்றின் வேவை நேரத்தை கணிசமாக குறைப்பது என்பதுதான். மது விலக்கு பிரச்சனையை தீர்க்காது, மாறாக பிரச்சனையை வேறு ரூபத்தில் கொழுந்து விட்டு எரியவே உதவும் என்பதுதான் வரலாறு உணர்த்தியிருக்கும் பாடம்.
-ஆர். மணி