லஞ்சம் தர மறுத்ததால் தேசிய வாள் சண்டை வீரரை ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் ஹோஷியர் சிங் (வயது 27). தேசிய வாள் சண்டை வீரரான இவர், கடந்த புதன்கிழமை தனது தாயார், மனைவி மற்றும் 10 மாத குழந்தை, சகோதரர் ஆகியோருடன் காஸ்கஞ்ச் மாவட்டம் பட்டியாலியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
பின்னர் சொந்த ஊரான மதுராவுக்கு பயணிகள் (பாசஞ்சர்) ரயிலில் திரும்பினார். அப்போது அவரது மனைவி, குழந்தை மற்றும் தாயார் ஆகியோர் மகளிருக்கான பெட்டியில் பயணம் செய்தனர்.
சிகந்தரா ரெயில் நிலையம் வந்தபோது ஹோஷியர் சிங்கின் மனைவிக்கு மயக்கம் வருவதாக அவரது தாயார் செல்லிடப்பேசியின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனால் கீழே இறங்கிய ஹோஷியர் சிங் தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு அதனை கொடுப்பதற்காக மகளிர் பெட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரயில்வே போலீஸார் ஹோஷியர் சிங்கிடம் மகளிர் பெட்டியில் என்ன வேலை? என்று கேட்டு தடுத்துள்ளனர். தனது மனைவியின் உடல்நிலை குறித்து விவரித்த அவரிடம் போலீஸார் ரூ.200 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதற்குள் ரயில் புறப்பட்டது. ஹோஷியர் சிங் லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ரயில்வே போலீஸார் அவரை ரெயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர். கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 17 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் ஹோஷியர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
வழக்குப் பதிவில் முறைகேடு
இந்த சம்பவத்தை மூடி மறைக்கும் வகையில் “தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு ரயிலில் ஏற முயன்றபோது ஹோஷியர் சிங் தவறி கீழே விழுந்துவிட்டார்.
இந்த விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாக’ போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஹோஷியர் சிங்கின் தாயார், சகோதரர் ஆகியோர் லஞ்சம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த போலீஸார் கீழே தள்ளியதால் தான் ஹோஷியர் சிங் உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர்.
இதனால் குற்றச்சாட்டுக்கு ஆளான இரண்டு போலீஸார் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
-http://www.dinamani.com