மதுக்கடைகளை மூடச்சொன்னால் ஏட்டிக்குபோட்டியாக சகல வசதியுடன் எலைட் பாரா? கொந்தளிக்கும் விஜயகாந்த்

vijayakanthசென்னை : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரினால் எலைட் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தை மேலும் சீரழிக்கலாமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..

”தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் ஒருமித்தகுரல் கொடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்காக அதிமுக அரசு இருக்கிறது. மதுக்கடைகளை மூடக்கோரினால் ஏட்டிக்குப் போட்டியாக , சகல வசதிகளுடன் கூடிய எலைட் மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதும், மது விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் அதிகாரிகளை கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்துவதும் என்ன நியாயம்?

சுமார் ஆயிரத்து முந்நூறு அரசுபள்ளிகளை மூடுவதாக செய்திகள் வருகின்றன. அ.தி.மு.க. அரசு அதை தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல், மதுவினால் சீரழிந்துகொண்டுள்ள தமிழகத்தை, மேலும் சீரழிக்க முயற்சிக்கலாமா?

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, உயர் அதிகாரிகளைக் கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்தி, குடிநீர் தேவையை சமாளிக்க உரியநடவடிக்கையை தமிழக அரசு ஏன் எடுக்கவில்லையென பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மதுவியாபாரத்தை அதிகரிப்பதில் காட்டும் அக்கறையை, இந்த அரசு பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சனையில் காட்டியிருக்கலாம் அல்லவா?

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 60 கோடி ரூபாய் செலவாகுமென்றும், மாதம் 20 லட்சம் ரூபாய் நடைமுறை செலவாகுமென்றும், சட்டமன்ற நிகழ்சிகள் 80 சதவிகிதம் தற்போது ஒளிபரப்பப்படுகிறது என்றும் மாபெரும் பொய்யை தமிழக அரசு கூறியுள்ளது.

சில லட்சங்களை செலவு செய்தாலே நேரடிஒளிபரப்பு செய்யமுடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற செயல்பாடுகளையோ, ஆற்றுகின்ற உரைகளின் முழுத்தொகுப்பையோ ஒளிபரப்பியதே இல்லை. அதே சமயத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களினுடைய பேச்சுக்கள் மட்டுமே முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த உண்மைகளை மறைத்து உயர் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக அரசு கூறியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் முதல் பாமர மக்கள் வரை பேசுகிறார்கள்.

வேளாண்துறையின் உதவி செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலையால், பதவியை இழந்து சிறை சென்ற முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் உதவியாளரராக பணிபுரிந்த ரவிகுமார் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது பிரேத பரிசோதனை அவசர அவசரமாக செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் தமிழக அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதை நினைவில் கொண்டு, ஒவ்வொரு பிரச்சனையிலும் மக்களை பற்றி சிந்திக்காமல், சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும்” இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: