இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட காக்கா முட்டைகளின் பரிதாப நிலையை பாருங்கள்

povertyடெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதுடன் தீய பழக்கங்களுக்கு ஆளாகுகிறார்கள். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகள் பற்றிய தகவலை இந்தியாஸ்பெண்ட் சேகரித்துள்ளது. தினமும் ரூ.47க்கும் குறைந்த வருமானத்தில் வசிப்பவர்கள் ஏழைகளாக கருதப்படுகிறார்கள். கிராமங்களில் வசிப்பவர்களை விட நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள 377 மில்லியன் இந்தியர்களில் 32 சதவீதம் பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அதில் 6 வயதிற்குட்பட்ட 80 லட்சம் குழந்தைகள் 49 ஆயிரம் சேரிப்பகுதிகளில் வசிக்கிறார்கள்.

49 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட சேரிப் பகுதிகளில் 80 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கீகரிக்கப்படாத ஆயிரக்கணக்கான சேரிகளில் ஏராளமான குழந்தைகள் உள்ளனர். 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேரிகளில் வசிக்கிறார்கள்.

நகர்ப்புற சேரிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகளுக்கு சரியான குடிநீர், கல்வி, பாதுகாப்பு இல்லை. சரியான சுற்றுச்சூழல் அமையாததால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது.

5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகளில் 72.7 சதவீதம் பேர் குழந்தையாக பலியாகின்றனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளில் 46 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களின் எடை மிகவும் குறைவாக உள்ளது. ஏழைக்குழந்தைகளில் 60 சதவீதம் பேருக்கு ஒரு வயதை அடைவதற்குள் போட வேண்டிய தடுப்பூசிகள் போடப்படுவது இல்லை.

நகர்ப்புற சேரிகளில் சுற்றுச்சூழல் மோசமாக உள்ளதாலும், அங்கு மக்கள் தொகை அதிகம் உள்ளதாலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காச நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் சேரிகளில் தான் மலேரியா உள்ளிட்ட நோய்களும் அதிக அளவில் ஏற்படுகிறது.

நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஆரோக்கியமாக உள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குழங்தைகளில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 10 லட்சத்து 90 ஆயிரம் பேர் வீடு இல்லாமல் உள்ளனர். அதில் 7 லட்சம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். அதில் 70 ஆயிரம் பேர் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

தெருவில் வசிக்கும் குழந்தைகளில் 52 சதவீதம் பேரின் குடும்பத்தார் வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள், 14.5 சதவீதம் பேர் வேலை தேடி இடம்பெயர்ந்தவர்கள்.

வீடு இல்லாத குழந்தைகளில் 46.3 சதவீதம் பேர் பைப்கள், தார்பாலின், மேம்பாலத்திற்கு அடியில், கோவில்கள் ஆகிய இடங்களில் வசித்து வருகிறார்கள்.

வீடு இல்லாத குழந்தைகளில் 54.5 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். அதில் 66 சதவீதம் பேர் சிறுவர்கள், 67 சதவீதம் பேர் சிறுமிகள். வீடு இல்லாத குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கும் ஆளாகுகிறார்கள்.

வீடு இல்லாத குழந்தைகளில் 83 சதவீதம் பேருக்கு புகையிலை பழக்கம் உள்ளது. 68 சதவீத குழந்தைகளுக்கு மது அருந்தும் பழக்கமும், 36 சதவீதம் பேருக்கும் கஞ்சா பழக்கமும் உள்ளது.

tamil.oneindia.com

TAGS: