இந்தியா, பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது கலாம் குழுவினரின் ராக்கெட்!

அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தயாரித்த ராக்கெட்டை ஏவியதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையே 1971-இல் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தப் போருக்காக அப்துல் கலாம் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள், வெடிகுண்டுகளை சுமந்து சென்று குறைந்த தொலைவு சென்று தாக்கும் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை தயாரித்து வழங்கினர்.

அவற்றில் மிக்-21 ரக விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட், டாக்காவில் இருந்த கிழக்குப் பாகிஸ்தானின் தலைமையகத்தை துல்லியமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலுக்கு அதிர்ச்சியடைந்த ராணுவம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

கலாம் குழுவில் பணியாற்றியவரும், இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானியுமான என்.சிவசுப்பிரமணியன் இது தொடர்பாக தினமணி நிருபரிடம் கூறியதாவது:-

இந்தியா, பாகிஸ்தான் இடையே 1971-இல் போர் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ராக்கெட் பொறியியல் பிரிவு தலைவராக கலாம் இருந்தார். இந்திய ராணுவத்துக்காக குறைந்த தூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகளை உருவாக்கும் பணி எங்கள் பிரிவிடம் வழங்கப்பட்டது.

100 கிலோ எடை கொண்ட வெடிபொருளை சுமந்து சென்று சுமார் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ராக்கெட்டுகளை நாங்கள் உருவாக்கினோம். முதல் கட்டமாக 150-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளும், அடுத்தக்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளும் நாங்கள் தயாரித்து வழங்கினோம். இந்த ராக்கெட்டுகள் 4 அடி உயரம் கொண்டவை.

போர்ச்சூழல் என்பதால் எங்கள் குழுவினர் இரவு, பகலாக உழைத்து ராக்கெட்டுகளை உருவாக்கினர். எப்போதெல்லாம் தடை ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் நிபுணர்களின் ஆலோசனையை கலாம் நாடுவார். இரவு நேரத்தில் உணவு கொண்டு வந்தும், டீ கொண்டு வந்தும் கலாம் எங்களை உற்சாகப்படுத்துவார்.

இந்த ராக்கெட்டுகளில் ஒன்று டாக்காவிலிருந்த கிழக்குப் பாகிஸ்தானின் தலைமையகத்தைத் தாக்கியதும் போர் முடிவுக்கு வந்தது.

பல துறைகளை ஒருங்கிணைப்பதில் வல்லவர்:- சிறியவகை ரோகிணி ராக்கெட்டை வழிநடத்தும் திசைகாட்டி அமைப்பை நாங்கள் உருவாக்கினோம். உடனடியாக அவர் இந்த அமைப்பை டாங்கிகளிலும், விமானப்படை விமானங்களிலும் பொருத்தலாம் என ஆலோசனை வழங்கினார். அவ்வாறே அந்த அமைப்பு அவற்றிலும் பொருத்தப்பட்டது.

இதய அடைப்பை நீக்கும் கருவியை (ஸ்டன்ட்) நாங்கள் வடிவமைத்தோம். ஆனால், எங்களால் பரிசோதனை செய்து அதன் திறனை நிரூபிக்க முடியவில்லை. உடனடியாக, “எய்ம்ஸ்’ மருத்துவமனை மருத்துவர்களை எங்களுடன் ஒருங்கிணைத்து அந்தச் சோதனைகளை நடத்தினார். இப்படி பலதுறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் ஆற்றல் அவரிடம் இருந்தது.

செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் (எஸ்.எல்.வி.) திட்ட இயக்குநராக ஆனபோதுதான் அவரது பரிமாணம் முழுமையாக வெளியில் தெரிந்தது.

ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள தனித்திறமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, குறைகளை விட்டுவிடும் அன்னப்பறவை அவர். அதனால்தான் அப்துல் கலாமால் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைத்து வெற்றி பெற முடிந்தது.

மனிதாபிமானம்: அவர் மனிதாபிமானம் மிக்கவர். திருவனந்தபுரத்தில் நாங்கள் வேலைசெய்தபோது சாப்பிடுவதற்காக சற்றுத்தொலைவு நடந்து செல்ல வேண்டும்.
அருகில் குருவாயூரப்பன் மெஸ்ஸில் தோசையும், கடலைப்பொரியும் சாப்பிடுவோம். குடியரசுத் தலைவரான பிறகு, அந்த மெஸ்ûஸ நடத்தியவரை தனது மாளிகைக்கு அழைத்து விருந்தினராக தங்கவைத்தவர்தான் கலாம்.

-http://www.dinamani.com

TAGS: