மதுவுக்கு எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசிபெருமாள் திடீர் மரணம்

sasi-perumal

கன்னியாகுமரி: காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயே தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.

இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் , 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று காலை காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் கோபுரத்தில் நின்றபடியே தற்கொலை மிரட்டல் விடுத்தார் சசிபெருமாள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். Sasi perumal passed away பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி அளிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதற்குள் சசிபெருமாளின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் சசி பெருமாளை தீயணைப்புத் துறையினர் கீழே இறக்கினர். உடனடியாக சசிபெருமாள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சசிபெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போராட்ட களத்திலேயே சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: