சேலம் : மதுபானக்கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காந்தியவாதி சசிபெருமாள் நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராடிய போது மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சசிபெருமாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் சசிபெருமாள் உயிரிழப்பையடுத்து மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி சேலத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத்தலைவர் பூமொழி ,சேலம் மக்கள் குழு அமைப்பின் தலைவர் பியூஸ் ஆகியோர் சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.