சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: ச.ப.இ.


காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி விருப்பமான “மதுவிலக்கு” கோரி சிறை செல்லும் போராட்டம் நடத்த இருப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது.

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம்,

வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி, மதுவிலக்குப் போராட்டக் களத்திலேயே உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.

சசிபெருமாள் அவர்களின் இறுதி விருப்பம் என்பது இந்த ஆகஸ்ட் மாதத்தில் மாபெரும் போராட்டங்கள் நடத்தி மதுவிலக்கு கோரி சிறை செல்ல வேண்டும் என்பதே. (1942ல் வெள்ளையனே வெளியேறு திட்டம் போல, மதுவே வெளியேறு என்று வலியுறுத்தி). அவரின் இறுதி விருப்பத்திற்கு உடனடியாக உழைப்பதே சமூக ஆர்வலர்களாகிய எங்களின் கடமையாகக் கருதுகிறோம்.

ஆகவே,  “சிறை செல்லும் போராட்டத்தை” அறிவிக்கிறோம்.

மதுவிலக்கிற்காகச் சிறைசெல்லத் தயாராக உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் “மட்டும்” 81441-78687 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டுகிறோம்.

போராட்ட தேதி, போரட்ட வழிமுறைகள் அனைத்தும் சசிபெருமாளின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு விரிவாக அறிவிக்கப்படும். மதுவிலக்கிற்காகக் குரல்கொடுக்கும் கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுகிறோம்.

குறிப்பு: சசிபெருமாள் அவர்களின் குடும்பத்தினர் மதுவிலக்கு தொடர்பான அரசின் கொள்கையை அறிவிக்காத வரையில் அவரின் உடலை வாங்கமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். அவர்களோடு, ஒத்துழைக்க சட்ட பஞ்சாயத்து இயக்கக் குழுவினர் தற்போது நாகர்கோவிலில் இருக்கிறோம்.

 கோரிக்கைகள்:

1. காந்தியவாதி சசிபெருமாள் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படவேண்டும்.

2. அரசாங்கம் பூரண மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்துகிறோம் என்று அறிவிக்கவேண்டும்.

3. அரசாங்கம், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வரை மதுவால் கிடைக்கும் வருமானத்தை

– மதுவின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்விற்காகவும்

– குடிநோயாளிகளின் மறுவாழ்விற்காகவும்

– மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக ”மட்டுமே பயன்படுத்துவோம்” என்று கொள்கை அறிவிப்பு வெளியிட வேண்டும்.

4.  மதுவிலக்கு அமல்படுத்துவது குறித்து கண்காணிக்க “மதுவிலக்கு கண்காணிப்புக் குழு” ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் சமூக ஆர்வலர்கள், மதுஒழிப்பு ஆர்வலர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

5. காந்தியவாதி சசிபெருமாளை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிதியுதவி அளிக்கவேண்டும். அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்.

6. காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் போராட்டத்தைக் கொச்சைபடுத்திப் பேசி, உரிய காலத்தில், உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரின் உயிர் பலியாகக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

7. அனைத்து பார்களையும் உடனடியாக மூட வேண்டும்.

8.  குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளால் தங்களுக்குப் பாதிப்பு என்று கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தப்பட்ட டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்படவேண்டும். அதுபோல், பள்ளி கல்லூரி, வழிபாட்டுத்தலங்களின் அருகில் உள்ள 1500 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

TAGS: