டெல்லி : ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அனைத்து மாநிலங்களின் காவல் துறை உயர் அதிகாரிகளை நேற்று அவசரமாக அழைத்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள், அமெரிக்கா உட்பட பல நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். சிரியா, லிபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகள், குண்டுவெடிப்பு, கடத்தல், துப்பாக்கி சண்டை போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவில் சில பகுதிகளை கைப்பற்றி வைத்துக்கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள், பல நாடுகளில் இருந்து இளைஞர்களை வரவழைத்து அங்கு ஆயுத பயிற்சி அளித்து வருகின்றனர். பல்வேறு நாட்டு இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்யும் வேலையையும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் செய்து வருகின்றனர்.
காஷ்மீர், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, அசாம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களில் உளவுத்துறை கண்காணித்ததில் சில இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாநில உளவுத்துறையினர் தந்த தகவல்கள் படி, இந்த இளைஞர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. உளவுத்துறை சந்தேகப்பட்டபடி, இந்த இளைஞர்களில் சிலர் சிரியாவில் படிக்கப்போவதாகவும், வர்த்தகம் செய்யப்போவதாகவும், வேலைக்கு போவதாகவும் கூறி விசா பெற்றுள்ளனர். அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன் அவர்களை போலீஸ் தடுத்து விட்டது.
இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் பல பேர் விடுவிக்கப்பட்டாலும், கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நேரடியாக இந்தியாவில் ஆட்களை நியமித்து ரகசியமாக ஆடியோ, வீடியோ மற்றும் புத்தகங்கள் வாயிலாக பிரசாரம் செய்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களை கவர, அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்படுகின்றன என்றெல்லாம் தவறாக தகவல்களை கூறி மூளைச்சலவை செய்யும் வகையில் இந்த ரகசிய பிரசாரம் அமைகிறது.
இதற்காக நியமிக்கப்பட்ட ஆட்கள், இந்த பிரசுரங்களை இளைஞர்களுக்கு தந்து அவர்களை படிக்க வைக்கின்றனர். வீடியோ படங்களையும் போட்டு காண்பிக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். இப்படி மூளைச்சலவைக்கு அடிமையாகி விடும் இளைஞர்களுக்கு அடுத்த கட்டத்தில் ஆயுத பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் முடிவில் தான் அவர்கள் சிரியா செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அனுமதி கிடைத்ததும், பாகிஸ்தான் உட்பட ஏதாவது நாடு வழியாக அனுப்பி வைக்கும் பணி நடக்கிறது. அதன் பின், முழு தீவிரவாதியாக அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது தான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் திட்டம். கடந்த சில மாதங்களில் நூறு பேருக்கு மேல் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மட்டும் தனியாக விசாரிக்கப்பட்டனர். அவர்கள் சிரியா செல்ல திட்டமிட்டுள்ளது தெரிந்தது. சிலர் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தெலங்கானாவை சேர்ந்த 17 பேர், மகாராஷ்டிராவை சேர்ந்த 4 பேர் , தாங்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், இவர்களில் சிலர் சிரியா போக திட்டமிட்டது தவிர்க்கப்பட்டது. அவர்களுக்கு பெரியவர்கள் மூலம் ஆலோசனை தரப்பட்டது. மற்றவர்களை தொடர்ந்து கண்காணிக்க போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் இந்திய இளைஞர்களை குறி வைப்பதைத் தடுக்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளை நேற்று டெல்லியில் உள்துறை செயலாளர் எல்.சி.கோயல் அழைத்து ஆலோசனை நடத்தினார். இளைஞர்கள் பலரும் மூளைச்சலவை செய்யப்பட்டு வருவது தெரியவருவதால் மாநில காவல் துறைக்கும் இது தொடர்பாக மத்திய உள்துறை அறிக்கை அனுப்பி கண்காணிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

























