ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா:இஸ்ரோ விஞ்ஞானி பெருமிதம்

india_001ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.

விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்துமை வளாக தரக்கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் இங்கர்சால் பேசியதாவது:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவதைப் பார்த்து உலக நாடுகள் வியக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு இந்தியா அனுப்பியது மிகப்பெரிய சாதனை. வேறு எந்த நாடும் இந்தச் சாதனையை இதுவரை செய்யவில்லை. பிஎஸ்எல்வி-28 ராக்கெட் மூலம் பிரிட்டனின் 5 செயற்கைக்கோள்கள் கடந்த வாரம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. வளர்ந்த நாடான பிரிட்டன் இந்தியாவை நாடிவருகிறது என்பது பெருமைக்குரியது. கடந்த சில ஆண்டுகளில் 30 ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஏராளமான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1962 முதல் 1982 வரை அதற்கு திட்ட இயக்குநராக செயல்பட்டவர் மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அவரது இறப்பு நாட்டுக்கு பெரும் இழப்பு. சந்திராயன்-1-ஐ தொடர்ந்து, சந்திராயன்-2 திட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தில் நிலவில் நகரும் ரோபோவை இறங்கி ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

-http://www.dinamani.com

TAGS: