மதுவால் நான்கு தலைமுறைகளை சீரழித்தவர் கருணாநிதிதான்: பழ.நெடுமாறன்

மதுக் கடைகளைத் திறந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்புக் கேட்டுவிட்டு முழு மது விலக்கு குறித்து பேசட்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

சசிபெருமாள் தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தக் கோரி, போராடி உயிர்நீத்துள்ளார். அவருடைய தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் வருகிற 4-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழர் தேசிய முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக, அதிமுக சார்ந்தவர்கள்தான் தமிழகத்தில் 10-க்கும் அதிகமான மதுபான ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கைக் கொண்டு வருவோம் என்று கருணாநிதி கூறுகிறார். முதலில், அவர் மதுபான ஆலைகளை இழுத்து மூடட்டும். அதன்பிறகு, மது விலக்கைப் பற்றி பேசட்டும்.
தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறந்து 4 தலைமுறைகளைச் சீரழித்ததற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, அதன்பிறகு அவர் மது விலக்கைப் பற்றிப் பேசினால் நம்பும்படியாக இருக்கும். இல்லையென்றால் இது தேர்தலுக்கான அறிவிப்பாகவே இருக்கும் என்றார்.

காவல் துறைக்கு கண்டனம்

கலிங்கப்பட்டியில் மதுக் கடைக்கு எதிரான போராட்டத்தில் வைகோ தலைமையில் ஈடுபட்ட பொது மக்களை போலீஸார் தாக்கியதற்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:

கலிங்கப்பட்டியில் உள்ளூர் மக்கள் அனைவரும் எதிர்ப்புத் தெரிவிக்கும்போதே, அந்த டாஸ்மாக் மதுக் கடையை மூடியிருக்க வேண்டும். அதிகாரிகள் அதைச் செய்திருந்தால் வன்முறைக்கு இடம் இருந்திருக்காது.

அந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். கலிங்கப்பட்டியில் நடைபெற்றது போல, தமிழகம் முழுவதும் போராட்டம் நிகழக்கூடிய நிலை இருப்பதை அரசு உணர வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: