மிகப் பெரிய வன்முறை வெடிக்கப் போகிறது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை

evks-elangovanசென்னை: மது விலக்குப் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக் கூடாது. பூரண விலக்கு குறித்த கோரிக்கையை அரசு ஏற்க முன்வராவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் தாக்குதலில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. வைகோ நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தமிழக அரசு பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறது. கலிங்கப்பட்டியில் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது. மதுவுக்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெடிக்கும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை என்பதே மக்கள் அனைவரின் குரல். பூரண மதுவிலக்கை திட்டமிட்டு செயல்படுத்தினால், அதை அமல்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செல்பேசி கோபுரத்தின்மீது ஏறிப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணத்தில் சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அவர் செல்பேசி கோபுரத்தில் ஏறும்போது கையில் வைத்திருந்த கயிற்றின் நிறத்திற்கும், காவல்துறையினரால் அவரைக் கீழே இறக்கிக் கொண்டு வரப்பட்டபோது இருந்த கயிற்றின் நிறத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

தொலைக்காட்சிகளில் சசிபெருமாள் மேலே இருப்பதையும், பிறகு கீழே வந்தடைந்ததையும்தான் ஒளிபரப்பினார்களே தவிர, இடையில் நடந்த எதையும் காட்டவில்லை. இவையனைத்திலும் ஏதோ மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் நினைக்கின்றனர். இந்தச் சந்தேகங்களைப் போக்கவேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

காலை 8 மணிமுதல் மதியம் ஒருமணிவரை – ஏறத்தாழ 5 மணிநேரம் 200 அடி உயர செல்பேசி கோபுரத்தில் அமர்ந்து, மதுவிலக்கு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்ததைச் செவிமடுக்காத மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்டக் காவல்துறைத் தலைவர், மாவட்டத் தீயணைப்புத்துறைத் தலைவர் ஆகியோர்தான் இந்தப் படுகொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உயிர்நீத்த சசிபெருமாளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிற வகையில் தற்கொலை செய்துகொண்டதாக வழக்கைப் பதிவு செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும்.

இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசுதான் முழுப்பொறுப்பாகும். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது என்றார் அவர்.

tamil.oneindia.com

TAGS: