காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!- தமிழக அரசு வாதம்

rajiv-killers-07மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, 4 வது நாளாக தனது வாதத்தை எடுத்துரைத்தார். அப்போது அவர்,

காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதியிடம் சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

குற்றவாளிகளின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டோ அல்லது குற்றவாளியின் நன்னடத்தைகளைக் கருத்தில் கொண்டோ விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், அதே நேரம் மாநில அரசு தகுந்த அரசின் அல்லது நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற வேண்டியதை கட்டாயமாக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.

ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் ஏற்கனவே இரண்டு முறை தண்டனைக் குறைப்பு பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்நிலையில் மூன்றாவது முறை தண்டனை குறைப்பு அளிக்க மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

2ம் இணைப்பு

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் 7 தமிழரை விடுதலை செய்வதில் எந்தவித அரசியலும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

3வது நாளாக நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தனது வாதங்களை முன்வைத்து கூறியதாவது:

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவில் எந்தவித அரசியலும் இல்லை. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு அப்போது எதிர்க்கட்சிகளும் கூட தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்தன.

இதுபோன்ற விவகாரங்களில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றால், மத்திய-மாநில அரசு இடையேயான அதிகாரப் பகிர்வு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால் அதை விடுத்து ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிக்கும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிப்பது ஏற்கத் தகுந்தது அல்ல.

கருணை மனுக்கள் எத்தனை முறை சமர்ப்பிக்கப்பட்டாலும் அவற்றின் மீது முடிவெடுக்க ஆளுநர் அல்லது ஜனாதிபதி ஆகியோருக்கு அதிகாரம் இருக்கிறது.

தங்களுக்கு வாழக்கை எப்படியாவது மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தாக்கல் செய்யும் மனுக்களை குறிப்பிட்ட முறைதான் தாக்கல் செய்ய முடியும் என்று சுருக்கி விடவேண்டாம்.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார்.

-http://www.tamilwin.com

TAGS: