காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி

sasiperumal_body_001மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.

இதையடுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் எனக் கூறி சசிபெருமாளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

பின்னர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சசிபெருமாளின் உடலை பெற்று அடக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவரது குடும்பத்தினர் சசிபெருமாளின் உடலைப் பெற சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் நாகர்கோவிலில் இருந்து, சேலத்திற்கு கொண்டு வரப்பட்டு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அப்போது சசிபெருமாள் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில், அவரது வீட்டுக்கு முன்பாக சசிபெருமாள் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் இறுதி சடங்கு செய்ய, சசிபெருமாள் உடல் அவர் வீட்டுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும், அதே இடத்தில் சசிபெருமாள் நினைவு மண்டபம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: