சென்னை: மதுவிலக்கு கோரிக்கையை சமாளிக்கும் வகையில் கணிசமான மதுக்கடைகளை மூடும் அதே நேரத்தில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை. குறிப்பாக கன்னியாகுமரியில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த குரல் ஒலித்து கேட்கிறது.
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம் வலுத்து வருவதால் தமிழக அரசு மதுக்கடைகளை குறைக்க தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டாஸ்மாக் மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை? பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை? -வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை? பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? கட்டிட உரிமையாளர் ஆட்சேபனை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை? பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை? மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் 50 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.75 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.50 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? கிராமப்புறங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.30 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
குறிப்பிட்ட இடங்களில் கடைகளை மூடினால் அதற்கு அருகே உள்ள கடைக்கு அதே வருவாய் கிடைக்குமா? டாஸ்மாக் திறப்பு நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணிவரை திறப்பதால் ஏற்படும் சாதகபாதகம் என்ன?
என கணக்கெடுத்து உரிய பதில்களை உடனடியாக இ மெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்து 856 கடைகளில் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்பட இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த கடைகளின் மூலமான வருவாய் அப்படியே பக்கத்து கடைக்கு செல்ல வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. வருவாய் இழப்பை சமாளிக்க பெருவணிக நிறுவனங்கள், கடை வீதிகளில் எலைட் மதுபானக் கடைகளை திறக்கலாம் எனவும் யோசிக்கிறது தமிழக அரசு.
அதேபோல்தான் இப்படி மதுக்கடைகளை மூடிவிட்டு உணவகங்களிலேயே மதுவிற்பனையை அறிமுகம் செய்வதன் மூலம் மதுநுகர்வு என்பது கட்டுப்பாட்டுக்குள் வரும் அதே நேரத்தில் வருவாயும் வந்து கொண்டே இருக்கும் என கணக்குப் போடுகிறது அரசு.
இத்தகைய உணவகங்களில் மதுபான விற்பனையை அறிமுகம் செய்வதன் மூலம் இதற்கான எதிர்ப்பு சிந்தனையை ஓரளவு மட்டுப்படுத்திவிட முடியும் என்பதும் அரசுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மதுக்கடைகளை கணிசமாக மூடும் அதே நேரத்தில் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள். மதுவிலக்கு கோரிக்கையை சமாளிக்கும் வகையில் கணிசமான மதுக்கடைகளை மூடும் அதே நேரத்தில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.