சென்னை லயோலா கல்லூரியில் கடந்த ஆண்டு சமூக பரிசோதனைக்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் தீவிரவாதிகளின் உருவத்தை படமாக வரைந்து காட்டிம்படி சொல்லப்பட்டது. சொல்லி வைத்தார் போல் அனைவரும் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட உருவத்தை மட்டுமே வரைந்திருந்ததைப் பார்த்து அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இஸ்லாமியர்கள் மீதான பிம்பம், எதிர்கால சந்ததியினரின் உள்ளத்தையும் கூட பாதித்திருப்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.
இந்நிலையில் தங்கள் மீதான பிம்பத்தை மாற்றும் விதமாகவும், தாங்களும் சராசரி மனிதர்களே என்பதைப் புரிய வைக்கும் விதமாகவும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமிலும், அமெரிக்காவின் நியூ யார்க்கிலும் இஸ்லாமிய மக்கள், சில சமூக பரிசோதனைகளை கடந்த மாதம் மேற்கொண்டனர்.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன் மும்பையின் சவ்பட்டி அருகே உள்ள சாலை ஓரத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மசிம் மில்லா என்ற இஸ்லாமியர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு அருகில் “நான் ஒரு இஸ்லாமியன். நான் உங்களை நம்புகிறேன். நீங்களும் என்னை நம்பினால் என்னைக் கட்டிப்பிடித்து உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தலாம்.” என்று எழுதியிருந்தார்.
இதைக் கவனித்த பொதுமக்கள், அவரிடம் பேசி, புகைப்படம் எடுத்து, அவரைக் கட்டிப்பிடித்து, இவ்வாறாக தங்களது அன்பை வெளிப்படுத்தி, மத நல்லிணக்கத்தைப் போற்றியபடி நகர்ந்து சென்றனர்.
-http://www.maalaimalar.com