பக்தர்களை பலி கேட்கும் திருவிழாக்கள் : தீர்வுதான் என்ன?

temp_acc_001ஜார்கண்ட் மாநிலத்தில் பெல்லாபகனில் நேற்று நடந்த சவான் சம்வார் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2007 ம் ஆண்டில் நடந்த சவான் சம்வார் திருவிழாவிலும், 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாகவே கோவில் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் உயிர் பலி ஏற்படுவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே சாதாரணமாக நடந்து வருகிறது.

கும்பகோணம் மகாமக குடமுழுக்கு விழாவில் 1992 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு புனித நீராடியதால் அதை காண முண்டியடித்து வந்த கூட்டத்தினரால் நெரிசலிலும் குளத்துக்குள் விழுந்து மிதிப்பட்டும் 48 பேர் பலியானார்கள்.

சபரிமலையிலும் 2011 ம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி 104 பேர் இறந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.

இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றான வடஇந்தியாவில் உள்ள ஹரிதுவாரிலும் 2011 ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய 17 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். முஸ்லிம்கள் புனித யாத்திரை செல்லும் மெக்காவிலும் கூட்ட நெரிசலால் 2013 ம் ஆண்டில் 48 பக்தர்கள் பலியானார்கள்.

பூகம்பம், சுனாமி, எரிமலை, போன்ற இயற்கையின் திடீர் சீற்றத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி இறக்க நேரிடுவதுண்டு.

இறைவனுக்காக கொண்டாடப்படும் திருவிழாக்களிலும் அளவுக்கு அதிகமான கூட்டங்கள் சேர்வதால் உயிர்பலிகள் அதிகரித்து வருகிறது.

மெய்ஞானிகள், முனிவர்கள், யோகிகள், சித்தர்கள், இவர்கள் எல்லோருமே ஆன்மீகத்தின் அடையாளமாகவும் அங்கீகாரமாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் ஆன்மீகத் தேடலை தனிமையில்தான் மேற்கொண்டனர். வழிகாட்டியாக திகழும் எந்த ஒரு சிறந்த ஆன்மீகவாதியுமே திருவிழாக்களிலோ, பெரிய வழிபாட்டுக் கூட்டத்திலோ இறைவனை நாடியதில்லை.

ஆன்மீகமும் மனம் மகிழும் பொழுதுபோக்கும் சேர்ந்ததாகவே முன்னோர்களால் திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில், திருவிழாக்களில் சடங்குகளும் மக்களை ஈர்க்கும் பிரம்மாண்டங்களுமே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. அதற்கு, முக்கியமான காரணம் உண்மையான, எளிமை விரும்பிகளான ஆன்மீகவாதிகள் அதிலிருந்து வெளியேறிவிடுகிறார்களோ அல்லது வெளியேற்றப்படுகிறார்களோ தெரியவில்லை.

திருவிழாக்களின் பின்புலமான அமைப்பினர், ஆன்மீகத் தேடல் தேவையில்லை, சடங்குகள், திருவிழாவே போதும் என்று இருக்கும் மக்கள் சமுதாயத்தை கையாளத்தெரிந்தவர்கள்.

உயிர்பலி ஏற்படாதவரை திருவிழாக்கள் மக்கள் விரும்புகிற வகையிலே நடந்துவிட்டுப் போகட்டும். ஆனால், தொடர்ந்து மரணங்கள் ஏற்படுவது மக்களுக்கே அந்த திருவிழாக்களில் உள்ள நம்பிக்கையை போக்கிவிடும்.

பல நாட்கள் திருவிழாக்கள் நடந்தாலும் எதாவது ஒரு நாளை அல்லது நேரத்தை பிரதானப்படுத்தி, அப்போது தரிசிப்பது மிகுந்த பலனுக்குரியது என்ற நம்பிக்கையை விளம்பரமாக்குகின்றனர்.

பின்னர் குறிப்பிட்ட அந்த நன்னாளில், அந்த நேரத்தில் பக்தர்கள் குவிவதால் உயிர்பலி ஏற்படுகிறது. அதுபோன்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

நெரிசலான நேரங்களில் கூட்டத்தின் கவனத்தை திடீரென திசை திருப்பும்படியான வி.ஐ.பி.கள் வருகையோ, அசம்பாவிதங்களோ ஏற்படாமல் நிர்வாகிகள் பார்த்துக்கொள்ளலாம்.

நெரிசலான கூட்டத்தில் பாம்பு வந்துவிட்டதாக ஒரு புரளியை ஏற்படுத்தினாலும் ஜனம் பயந்து ஓடும்போது சிலரை கீழே தள்ளி மிதித்து சாகடிக்கவே செய்யும்.

ஆபத்து எல்லா வகையிலும் வருகிறது. அதுக்கு ஆண்டவன் முன்னிலையில் நடக்கும் திருவிழாக்களும் விதிவிலக்கல்ல என்பது காலத்தின் அவலம்.

-http://www.newindianews.com

TAGS: