மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் மனஅழுத்தம்: ஓர் அதிர்ச்சி தகவல்

sress_student_001மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் பலர் தங்கள் படிப்பினை பாதியில் நிறுத்தும் அவலம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த வருகிறது.

மன அழுத்தம் காரணமாக 4,400 மாணவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.யிலிருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் கூறினார்.

இது சாதாரண தனியார் பள்ளிகளில் நடந்தது அல்ல. மத்திய அரசின் முதன்மையான கல்வி நிறுவனங்களிலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாதியில் கல்வியை நிறுத்த காரணமானது சிரமமான கல்வியின் மன அழுத்தம்தான், அவர்கள் தற்போது படித்துக்கொண்டிருந்த கல்லூரிகளான ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.யில்தான் இதுக்கான சூழல் உள்ளது என்று மட்டும் கூறமுடியாது.

அதன் ஆரம்பம் பள்ளிகளிலேயே கூட இருந்திருக்கலாம். தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் மாணவர்களை அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் பொருட்டில், பெற்றோர்களின் உடந்தையும் இருப்பதால் மாணவர்களை விரட்டு விரட்டு என விரட்டி கசக்கிப் பிழிகின்றனர்.

காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மெட்ரிகுலேசன் பள்ளிகள் சிறப்பு (special) வகுப்புகளும் நடத்தி, மாணவர்களை ஒரு வழிபண்ணி விடுகின்றனர்.

காலை 7 மணிக்கு பள்ளிக்குச் செல்ல 5 மணிக்கே எழுந்து காலைகடன்களை முடித்து ஜெட் வேகத்தில் ஒரு இயந்திரத் தன்மையோடு இயங்கும் இவர்கள், உணவின் மீதே நாட்டம் அற்றவர்களாகி விடுகின்றனர்.

இயந்திரங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை போல, வேகவேகமாக சமைக்கப்பட்ட உணவுகள் அவசர அவசரமாக விழுங்கப்படும்.

பிறகு புத்தகமூட்டை சாப்பாடு, தண்ணீர் என பெரிய சுமையோடு ஓடிக்கொண்டு இருக்கின்றனர். நெரிசலான வேன் பயணம் வேறு.

இதில், மாணவர்கள் வீட்டில் உறங்கக் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் வீணாக்கி விடுவதாக நினைத்து அக்கறையோடு 5 பாட ஆசிரியர்களும் மானாவாரியாக வீட்டுப்பாடத்தையும் திணித்து விடுகின்றனர்.

மாணவர்களுக்கு முக்கால் இரவு சிவராத்திரிதான். அந்த இரவுக்குள் முடிக்காவிட்டால் அடுத்தநாள் வகுப்பில் அடி, அபராதம் போன்ற தண்டனைகள் உண்டு. இது ஒருநாள் அல்ல, ஒவ்வொரு நாளும்.

அந்த பிஞ்சு விரல்கள் விடும் சாபம் காதில் விழுந்துதான், சில எழுத்தாளர் விரல்களும் எழுதுகின்றன. விமோசனம்தான் இல்லை.

பிள்ளைகள் வந்து பெற்றோர்களிடம் தங்களுடைய கலைப்பையும் இயலாமையையும் சொன்னாலும் பெற்றோர்களுக்கு அதை புரிந்துகொள்ள முடிந்த போதும் யதார்த்தத்தை மறைத்துவிட்டு, எல்லா பசங்களும் அந்த சிரமங்களை தாங்கிக் கொண்டுதானே படிக்கின்றனர்.

உனக்கு மட்டுமா முடியல என்று மகன் சாதனை படைக்க வேண்டும் என்ற மனநிலையில் சமாதானப்படுத்தி விடுகின்றனர். இப்படி ஒவ்வொரு பெற்றோரும்.

சமீபத்தில் 9ம் வகுப்பு மாணவர்கள் இரண்டுபேர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதிப்பெண்களால் திருப்திபடுத்த முடியாததால் தண்டவாளத்தில் கழுத்தைவைத்து துண்டித்துக்கொண்டனர். இதுபோல, பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இந்தியாவில் இப்போது நிலவிவரும் கல்விமுறையில் தோற்றுப் போனவர்கள் மட்டுமல்ல, ஜெயித்தவர்களும், அப்பா தாங்க முடியலடா சாமி என்றுதான் முனகிக் கொண்டிருக்கின்றனர்.

சிரமமானால், அது ஒரு கல்வியே இல்லை, கல்வியின் அடிப்படை கொள்கை, என்பதே, வளர்ந்து வருபவர்களுக்கு இந்த உலகைப்பற்றி அறிந்துகொள்ள எளிதாக உருவாக்கி கொடுக்கப்படும் ஒரு படிப்பினைதான்.

இதோடு, வேலைக்கல்வியும் சேர்ந்துகொண்டதால், தளிரும் மலரும் குலுங்கும் வசந்தபருவமாக இருக்க வேண்டிய கல்விக்காலம், வறண்ட பாலைவனமாகவும் முரட்டு பாறைமுகமாகவும் மாணவர்களை மிரட்டுகிறது.

மாணவர்கள் பலவிதம் அதில் பலவீனமானவர்களும் அதிகமாக உண்டு. எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான சுமை, வேகம் நம் கல்வி முறையில் இருப்பதால், தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் பாடு திண்டாட்டம்தான்.

-http://www.newindianews.com

TAGS: