பிடிப்பட்ட தீவிரவாதி பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் கோர இந்தியா முடிவு செய்துள்ளது

udhampur-attackஜம்மு: காஷ்மீரில் பிடிப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் முறைப்படி கோர இந்தியா முடிவு செய்துள்ளது. உதம்பூரில் கடந்த 5-ம் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து முகமது நவீத் என்ற இளம் தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அவன் பாகிஸ்தானின் பைசலாபாத் நகரிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவி ஒரு மாதத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் தங்கியிருந்ததும், பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் தீவிரவாதி நவீத் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் இல்லை என்று அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் முகமது நவீத்தின் தந்தை தனது மகன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான் என ஒப்புக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை தீவிரவாதி நவீத் பற்றிய தகவல்களை அளிக்க கோரி பாகிஸ்தானுக்கு முறைப்படி கடிதம் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல தாக்குதலுக்கு முன்பாக நடந்த தெலைபேசி உரையாடல்கள் குறித்த தகவல்களையும் பல்வேறு நாடுகளிடம் என்.ஐ.ஏ கேட்டுள்ளது. தீவிரவாதி நவீத்தை நாளை டெல்லி அழைத்து வந்து விசாரிக்கவும், அவனிடம் உண்மை கண்டறியும் சோதனை, குரல் மாதிரி, உளவியல் சோதனை உள்ளிட்டவற்றை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

-http://www.dinakaran.com

TAGS: