சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாங்கள் பயன்படுத்திய 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை அரசிடம் ஒப்படைப்போருக்கு ரூ.30,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் வகையிலான திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன்படி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தங்களது வாகனங்களை அரசிடம் ஒப்படைப்போருக்கு ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் அளிக்கப்படும்.
அதாவது, கார் போன்ற சிறிய வாகனத்தை ஒப்படைக்கும் நபருக்கு, புதிய வாகனங்கள் வாங்கும்போது ரூ.30,000 வரை சலுகைகள் வழங்கப்படும்.
இதேபோல், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.50,000 வரை சலுகைகள் வழங்கப்படும். வரி விலக்கு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து பெரிய வாகனங்களை ஒப்படைப்போருக்கு ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும்.
இதற்கான திட்ட வரைவு இறுதி செய்யப்பட்டு மத்திய நிதியமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைக்கப் பெற்றதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.
-http://www.dinamani.com