ஜெயலலிதாவின் சுதந்திரதின உரையில் மது விலக்கு பற்றி மருந்துக்கு கூட அறிவிப்பு இல்லை!

tasamc-jayaசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய, சுதந்திர தின உரையின்போது, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மதுவிலக்கு ஒரு அம்சமாகவே அவரது உரையில் இடம்பெறவில்லை.

மதுவிலக்கு கோரி போராடிய, காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்த பிறகு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வலுத்தன. கல்லூரி மாணவர்கள் சில இடங்களில் போராட்டம் நடத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. வாழப்பாடி அருகே, டாஸ்மாக் மீது குண்டு வீசியதில் அப்பாவி தொழிலாளர் உயிரிழந்தார். சென்னை குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் காயமடைந்தார். இதுபோன்ற களேபரங்கள், வரும் சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்ற கருத்து பரவலாக எழுந்தது.

எனவே, டேமேஜ் கன்ட்ரோலுக்காகவாவது, மதுவிலக்கு அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட சுதந்திர தின உரையை ஜெயலலிதா பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாட்ஸ்சப் போன்ற சமூக வலைத்தளங்களிலும், சுதந்திரதினத்தன்று ஜெயலலிதா, தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது குறித்தோ அல்லது, மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தை குறைப்படு குறித்தோ அறிவிப்பு வெளியிடுவார் என்று தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்நிலையில், கோட்டையில் தேசிய கொடியேற்றி ஜெயலலிதா இன்று உரையாற்றியபோது, மாநில மக்களில் பெரும்பாலானோர் மது விலக்கு அறிவிப்பை எதிர்நோக்கி ஊடகங்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஜெயலலிதா ஆற்றிய 10 நிமிட உரையில் மதுவிலக்கு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மது கொள்கை பற்றிய வேறு எந்த தகவலும் அவரது உரையில் இடம்பெறவில்லை. எனவே, இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி விமர்சனம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: