ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியாக நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்து உள்ளனர். எல்லையில் கிராமமக்கள் வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2003–ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதிக்காமல், காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டுமே நேற்று முன்தினம் வரையில் 32 முறை அத்துமீறி பாகிஸ்தான், காஷ்மீரில் தாக்குதல் நடத்தி உள்ளது.
நேற்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்தார். இரு தரப்பு நல்லுறவினை பேண அவர் விருப்பம் வெளியிட்டார். இருதரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் 23–ந்தேதி தொடங்குகிறது. இன்னொரு பக்கம் தொடர்ந்து 7–வது நாளாக காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தொடர் தாக்குதல்களை நடத்தியது. பூஞ்ச் மாவட்டத்தில், மெந்தார் தாலுகாவில் பசோனி என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம், பீரங்கி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 16 பேர் காயம் அடைந்து உள்ளனர். எல்லையில் துப்பாக்கி சூட்டை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்கின்றனர். பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் குண்டு வீச்சுக்கு பயந்து எல்லையோர கிராமங்களில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையானது வருகிற 23-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் தாக்குதலானது எல்லையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
-http://www.nakkheeran.in