கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை: நிலம் ஒதுக்க உ.பி. முதல்வர் உறுதி; தருண் விஜய் எம்.பி. தகவல்

கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.

இதுதொடர்பாக லக்னௌவில் முதல்வர் அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் தருண் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து தருண் விஜய் கூறியதாவது:

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான புனித யாத்ரீகர்கள் வந்து செல்லும் புனிதத் தலங்களில் ஒன்றான உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த ஒராண்டாக முயற்சித்து வருகிறேன். இதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்துப் பேசினேன். சிலை அமைப்பதற்கான இடம் உத்தரப்பிரதேச மாநில நீர்பாசனத் துறை வரம்பின் கீழ் வருகிறது. இதனால், சிலை அமைக்க நிலம் ஒதுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

ஹரித்வாரில் திருவள்ளுவரின் சிலை அமைக்க மாநிலங்கவையில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. கே.சி.தியாகி ஆகியோரும் ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட கடிதத்தையும் அகிலேஷ் யாதவிடம் அளித்தேன். அதைப் பெற்றுக் கொண்ட அகிலேஷ் யாதவ், “வட இந்தியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பலப்படுத்த முடியும். எனவே, அவரது சிலையை அமைப்பதற்குரிய நிலத்தை ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலப் பள்ளிப் பாடங்களில் திருக்குறளைப் பாடமாக சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார் என்றார் தருண் விஜய்.

ஹரித்வாரில் சுமார் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.dinamani.com

TAGS: