தமிழக அரசின் (அழைப்பாணை) சம்மனும் – கூடங்குளம் அணு உலையில் வெளி வந்த அணுகழிவும்

koodangkulamஅணு உலையில்  அணுகழிவு உருவாகியுள்ளது -ஆதாரபூர்வமான செய்தி இதோ …
==================================================================
தற்போது  கூடங்குளம் அணு உலையில் இருந்து, அணு உலைக் கழிவுகள்  (எரிக்கப்பட்ட யுரோனியம் எரிகோல்கள் ) உருவாகியுள்ளது, அது அணு உலையில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறது எனவும், முதல் அணு உலையில் பயன்பத்தப்பட்ட எரிபொருளில் 30 விழுக்காட்டை தற்போது அகற்றுகிறோம். இதற்கு சில வாரங்கள் ஆகும் என்றும் கூடங்குளம் அணு உலை வளாக இயக்குனர் சுந்தர் அவர்கள் வெளிப்படையாக  தெரிவித்துள்ளார். ( தினகரன் செய்தி:12.08.2015)

அணுஉலை கழிவு என்ன செய்யும் :
===============================
அணு உலையில்  யுரேனியம்-235  எரிபொருளாக  பயன்படுத்தப்படும் போது,  அணுக்கள் பிளக்கப்பட்டு சீசியம், சிராண்டியம் போன்ற கன உலோகங்கள் தோன்றுகின்றன.  இதனால் யுரேனியம் எரிபொருள் பயன்படுத்துவதற்கு முன்னர் இருந்த கதிரியக்க அளவை விட, அணு உலையில் அது  பயன்படுத்தப்பட்ட பின் கதிரியக்க அளவு பத்து இலட்சம் மடங்கு அதிகமாக இருக்கும்.

அணுஉலை கழிவு-கர்நாடக நிலைபாடு :
==================================
கர்நாடகத்தில் கோலார் தங்கவயலில்,  2013 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலை கழிவுகளை வைப்போம் என்று இந்திய அரசு டெல்லி உட்சநீதிமன்றத்தில் சொன்னவுடன், கருநாடகத்தை ஆண்டு கொண்டு இருந்த  ஆளும் பாஜக , இந்தியாவை ஆண்டு கொண்டும், கருநாடகத்தை ஏற்கனவே ஆண்ட காங்கிரசு கட்சியும்  , கருநாடக அஇஅதிமுக, சிபிஎம்  உட்பட அனைத்துக் கட்சிகளும்,  கர்நாடக மக்களும்  தெருவுக்கு வந்து போராடினர் .  கருநாடகத்தில் பேருந்துகள்  இயங்கவில்லை …

தொடர் வண்டியை இயங்க அனுமதிக்கவில்லை. இரண்டே நாட்களில் இந்திய அரசு கோலார் தங்கவயலில் அணு உலை கழிவுகளை வைக்க மாட்டோம் என டெல்லி உட்சநீதிமன்றத்தில் கூறி பின் வாங்கியது .

தமிழக அரசின் தற்போதைய செயல்பாடு:
===================================
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகள் தொடர்பாக வள்ளியூர் வழக்கு மன்றம் காவல்துறை மூலமாக சுமார் 1000க் கணக்கான அழைப்பாணைகளை கடந்த பத்து நாட்களாக  இடிந்தகரை-கூடங்குளம்-கூத்தன்குழி-கூட்டப்புளி  கிராம மக்களுக்கு அனுப்பியிருக்கிறது. இங்குள்ள அணு உலை எதிர்ப்பு போராளிகளான ஆண்கள், பெண்கள் ஒவ்வொருவருக்கும் 1 முதல் அதிகபட்சமாக 8 அழைப்பாணைகள் வரை கொடுக்கப்படுகின்றன. செவ்வாய் கிழமை ஆகசுடு மாதம்  18-08-2015 அன்று    வள்ளியூர் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமென இந்த அழைப்பாணைகளில் கூறப்பட்டு உள்ளன.

தமிழக அரசு  இப்போது சம்மன் அனுப்புவது ஏன்?
==========================================
இந்த கூடங்குளம் அணுஉலை கழிவு ஏற்படுத்தும்  பயங்கர கதிரியக்கம் மூலம் தற்போது கூடங்குளம் உட்பட அருகாமையில் உள்ள அனைத்து ஊர்களிலும் புற்றுநோய் உட்பட எண்ணற்ற நோய்கள் மக்களுக்கு தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. கூடன்குளத்தில் மட்டும் 500-கும் மேற்பட்டோர் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள  வெளிவந்து கொண்டு உள்ளது.  இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் பதட்டத்துடனும், அச்சத்துடனும் தற்போது கொந்தளிப்பான மனநிலையில் இருந்து வருகின்றனர். எனவே மக்களுக்கு அணுஉலைக் கழிவு பற்றிய இந்த உண்மையை பற்றி உணராமல் மறைக்கவும், அணுஉலை கழிவு வைத்துள்ளதை பற்றி மக்கள் எதிர்ப்பு  போராட்டமாக மாற்றப்படாமல் முறியடிக்கவுமே, அரசு காவல்துறை மூலம் அழைப்பாணை(சம்மன்) என்ற ஆயுதத்தை  எடுத்து ஏவியுள்ளது.

கூடங்குளம அணு உலை எதிர்ப்பு போராட்டம் மூலம் அணுஉலை பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு உருவாகி, இந்தியாவெங்கும் அணு உலை வைப்பதற்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மராட்டிய மாநிலம் ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க மக்கள் மட்டுமன்றி பாஜக-சிவசேனா கூட்டணி அரசுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இடிந்தகரையில் மையம் கொண்டு வரும் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் இந்திய அரசுக்கு உள்ளது. ஏற்கனவே  தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட ஒன்றாவது அணு உலை சுமார் இருபத்தைந்து முறைக்கு மேல் பழுது பழுது என முறையாக இயங்காமல் உள்ளது , கடந்த ஓராண்டாக இதோ ரெடி, ரெடி எனச் சொல்லிக் கொண்டே சோதனை ஓட்டம் முடிந்தது எனக் கூறியும் இரண்டாவது அணுஉலை இயக்க முடியாமல் உள்ளது. இந்நிலையில் மேலும் கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகள் அமைக்க,  இங்கு ஒரு அமைதியான சூழல் இருப்பது போன்ற நிலையை எல்லோர் முன் காட்ட வேண்டிய தேவை ஆளும்அரசுகளுக்கு உள்ளது. எனவே மக்களை அச்சுறுத்தி, அடக்கி வைக்க தமிழக அரசு மூலம் அழைப்பாணை(சம்மன்) என்ற ஆயுதத்தை இந்திய அரசு எடுத்துள்ளது.

இடிந்தகரையில் 1500 நாட்களை நெருங்கி, உலகத்திற்கே முன்மாதிரியாக தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. என்னதான் தமிழக அரசு, அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை தாங்கள் ஒடுக்கி விட்டோம் எனச் வெளியே சொன்னாலும்கூட, இங்கு “அக்கினிகுஞ்சு” போல போராட்ட நெருப்பை அணைய விடாமல் இடிந்தகரை மக்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து  பாதுகாத்து வருகிறார்கள். இடிந்தகரை ஊரில் உள்ள மக்களிடையே பிளவு ஏற்படுத்திட ஒரு யுத்தியாக அழைப்பாணை(சம்மன்) என்ற ஆயுதத்தை தமிழக அரசு கையில் எடுத்து உள்ளது

கடந்த  08-05-2014 அன்று  டெல்லி உச்சநீதிமன்றம் கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு  போராட்ட வழக்கில் தமிழக அரசு திரும்பி பெறுவதாக தெரிவித்த248 வழக்கு தவிர,  மீதம் உள்ள 132 வழக்கையும் திரும்ப பெறும் முடிவை உள்ளூர் நீதிமன்றமே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கூறியது. இந்த தீர்ப்பு வந்தபின்பு நீதிமன்ற நடவடிக்கையாக அரசு எதுவும் செய்யாமல்,  இப்போது 400 நாட்கள் கழிந்த நிலையில், ஜெயலலிதா அரசு மக்களுக்கு வழக்குக்கு வரச் சொல்லி அழைப்பாணை(சம்மன்) கொடுப்பது என முடிவு செய்து,  தற்போது அதை நடைமுறைப்படுத்துகிறது.

மக்களின் போராட்டம் 1500 நாட்களை நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் திடீர் என மக்களிடையே சம்மன்களை  கொடுத்து அவர்களுக்கு உளரீதியான நெருக்கடியை ஏற்படுத்தி போராடும் மக்களை பலவீனப்படுத்தி, அச்சுருத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்கிறது.

கூடங்குளம் அணு உலையில்  அணுகழிவு உருவாகியுள்ளது பற்றியும், அது  கூடங்குளம் பகுதியில் வைக்கப்படுவதை யாரும் வாய் திறந்து பேசவும், போராடி  விடவும்  கூடாது என  தமிழக அரசு  எசசரிக்கையாக  உள்ளது. சுற்றியுள்ள சுமார் 4 கோடி மக்களின் (மதுரை முதல் தெற்கே உள்ள தமிழகம், தென் கேரளம்) வாழ்க்கைக்கு ஆபத்தாக உள்ள, இது வரை சொல்லிக் கொண்டு இருந்த அணுஉலை கழிவு இப்போது உருவாகி வந்து விட்டது.   கர்நாடகம் போல் அணு உலை கழிவு தமிழகத்தில்  வைக்கப்படுவதை  எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்து விடக் கூடாது, அணுஉலை எதிர்ப்பு போராட்டம் மீண்டும் வலுப்பெற்று விடக் கூடாது  என்ற காரணத்திற்காகவும் , பொதுமக்கள் மீண்டும் போராட்டக் களத்திற்கு வந்து விடக் கூடாது என்பதற்காகவுமே  தமிழக அரசு சம்மன் என்ற அடக்குமுறை ஆயுதத்தை எடுத்துள்ளது.

தமிழக அரசின் சம்மன் என்ற அடக்குமுறை ஆயுதத்தை முறியடிப்போம். கூடன்குலம் அணு உலை கழிவு பற்றிய உண்மையை   உலகிற்கு எடுத்து செல்வோம். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக்குவோம். தாய் தமிழ்நாட்டை அழியாமல் பாதுகாப்போம்.மக்களிடையே தமிழக அரசு ஏற்படுத்தும் பிளவு-சீர்குலைவு முயற்சிகளை  முறியடித்து போராட்டத்தை தொடருவோம் .

-http://www.pathivu.com/

TAGS: