டெல்லி : காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி முகமது நவீத் யாகூப் என்ற உஸ்மான் கான், தனக்கு லஷ்கர் அமைப்பினர் ஒரு மாத்திரையைக்கொடுத்தாகவும் அதன் பின்னரே தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு தயரானதாகவும் தெரிவித்துள்ளான். இந்துக்களை கொல்வது தனக்கு வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருந்த அவன், தற்போது தன்னை காஷ்மீருக்கு அனுப்பிவைத்தவர்களை சுட்டுக்கொல்ல தம்மை ஒருமுறை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது கடந்த 5 ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததுடன், ஒரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தீவிரவாதியான முகமது நவீத் யாகூப் என்ற உஸ்மான் கான், அப்பகுதி கிராம மக்களின் உதவியுடன் உயிருடன் பிடிபட்டான்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் போலீஸார் விசாரணையை தொடர்ந்து, டெல்லி கொண்டு செல்லப்பட்ட நவீத்திடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மாத்திரை ஒன்றை சாப்பிடுமாறு தம்மிடம் லஷ்கர் தலைமை அறிவுறுத்தி இருந்ததாகவும், அதன்படி அந்த மாத்திரையை தான் சாப்பிட்டதாகவும் நவீத் தெரிவித்துள்ளான். நவீத் சாப்பிட்ட அந்த மாத்திரை சிந்திப்பதை மழுங்கடிக்கக்கூடிய மனோவியல் ரீதியான மாத்திரை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிடிபட்டபோது இந்துக்களை கொல்வது தனக்கு வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருந்த தீவிரவாதி நவீத், தற்போது காஷ்மீரில் தற்கொலை தாக்குதலை நடத்த தன்னை அனுப்பிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவரை சுட்டுக் கொல்லவேண்டும் என்று கூறி உள்ளான். தம்மை ஒருமுறை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தால், தன்னை காஷ்மீருக்கு அனுப்பிவைத்தவர்களை சுட்டுக்கொல்ல விரும்புகிறேன் என்று அவன் தெரிவித்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் காஷ்மீருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் ‘முஸ்லீம் சகோதரர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள்’ என்ற வீடியோவை தனக்கு போட்டுக்காட்டி லஷ்கர் இயக்கம் தனக்கு மூளை சலவை செய்ததாகவும், இந்த வீடியோவே தீவிரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள முடிவு செய்ய வைத்ததாகவும் நவீத் கூறியதாக அதிகாரிகள் மேலும் கூறி உள்ளான்.
இதனிடையே நவீத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்காததையடுத்து, நவீத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நவீத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.