வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ளனர்: சுப்பிரமணியன் சுவாமி தகவல்

subramaniyan_002வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர்; அந்தக் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மத்திய அரசு மீட்டு வரும்” என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் இந்திய – வம்சாவளியினர் சார்பாக “லீட் இந்தியா 2020′ என்ற பெயரில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம், ரூ.125 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்த பிரச்னையும் இருக்காது. மத்திய அரசு விரைவில் இதற்கான நடவடிக்கையை தொடங்கவுள்ளது.

அந்தப் பணம் இந்தியாவுக்கு நிச்சயம் திரும்பக் கொண்டு வரப்படும். எனக்கு இதில் மிகவும் நம்பிக்கை உள்ளது. ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடியின் சுபாவம் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும்.

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை துணிச்சலாக தொடக்கி வைத்து, அவற்றைச் செயல்படுத்தினார். அவருக்கு அடுத்த குடியரசுத் தினத்திலாவது, பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறேன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. இதன் மூலமாக, எதிர்க்கட்சிகளிடம் பொறுமையாக நடப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பதை மத்திய அரசு நன்றாகத் தெரிந்து கொண்டுவிட்டது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

-http://www.dinamani.com

TAGS: