மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில் அறிமுகமாகிறது!!

physically-challengedசென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா தெரிவித்துள்ளார்.

இதனால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்) உடையவர்களுக்கான 12-ஆவது சர்வதேச மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

இதில் கலந்துகொண்டு லோவ் வர்மா பேசியது: மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்தத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமஉரிமை, அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. அதன்படி 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் வெறும் 7 வகையான ஊனங்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.

அந்த எண்ணிக்கை இப்போது 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளின் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக அதிகரிக்கப்படும். இது மாற்றுத் திறனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மத்திய அரசின் “மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் சார்ந்த, வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 2022-ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்க உள்ளோம் என்றார் அவர்.

மத்திய அரசு செயலரின் இந்த அறிவிப்பு மாற்றுத் திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tamil.careerindia.com

TAGS: