இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

india-pakistan-flag_0டெல்லி : பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டெல்லியில் வரும் 23 ஆம் தேதி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இடையே உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு சிறப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் டெல்லி வரவிருந்த நிலையில், அவரை சந்திப்பதற்கு பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி மற்றும் மிர்வாஸ் உமர் பரூக் போன்ற காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தலைமைத் தூதர் இரு தினங்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் நடக்க இருந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு பிரிவினைவாதிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தலைமை தூதரகத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த சந்திப்பை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரையும் வழங்கியிருந்தது.

ஆனால், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான், டெல்லியில் ஹூரியத் தலைவர்களை தங்கள் நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பார் என்று திட்டவட்டமாக கூறியது.

இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் பிரிவினைவாதிகளை சந்திப்பது நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்வுதான் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் டி.சி.ஏ. ராகவனிடம் இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்தார். அப்போது, சர்தாஜ் அஜீஸ்-அஜித் தோவல் சந்திப்புக்காக எந்த முன்நிபந்தனைகளையும் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் பிடிவாதத்தால் இருநாடுகளுக்கும் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: