அறிவியல், தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தானாம்: சொல்கிறது மத்திய அரசு

rajnath_singhலக்னோ: அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புராணங்கள் மூலமாகத்தான் சிக்கலான பல தத்துவக் கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. வேறு எந்த மொழியும் இப்படிப்பட்ட சிக்கலான தத்துவ கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் என்று எந்தத் துறையாக இருந்தாலும் சமஸ்கிருதத்தின் பயனை அறிஞர்கள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர். சூப்பர் கணினியை கட்டமைத்த நாசா கூட சமஸ்கிருதமே அதற்கு பொருத்தமான மொழி என்று கூறியுள்ளது.

ஆனால் இந்தியாவில் நாம் அதனை விட்டு விலகியுள்ளோம் என்பது முரணானது. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இளைஞர்கள் கூட சமஸ்கிருதம் வாசிக்கின்றனர். ஆகவே, விருப்பமும் உறுதியும் இருந்தால் சமஸ்கிருத மொழியை மீண்டும் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசியுள்ளார். சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்கும் வகையிலான ராஜ்நாத்சிங்கின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: